விசாரணை அதிகாரிகள் 1எம்டிபி-யைக் குறைகூறியதை மேற்கோள்காட்டி இரண்டு செய்தி அறிக்கைகளை வெளியிட்டிருந்த த ஸ்டார் நாளேட்டை 1எம்டிபி நிறுவனம் சாடியுள்ளது.
த ஸ்டார் “அலட்சியமாக” செய்திகளை வெளியிடுவதாக ஓர் அறிக்கையில் சாடிய 1எம்டிபி, அது “உரிமம் பெற்று ஒழுங்குமுறையுடன் நடத்தப்படும்” நாளேடு என்பதை நினைவுறுத்தியது.
“த ஸ்டார் போன்று ஒழுங்குமுறையுடனும் உரிமம் பெற்றும் நடத்தப்படும் ஒரு நாளேடு ஆதாரமற்ற கருத்துகளையெல்லாம் உண்மைச் செய்திகளாக வெளியிடுவதைக் கண்டு எம்டிபி கவலை கொள்கிறது.
“மேலும், அதிகாரிகள் 1எம்டிபி மீது விசாரணை நடத்தி வருவதும் இன்னும் இறுதி முடிவு காணப்படவில்லை என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும்”, என்றும் அந்நிறுவனம் கூறிற்று.
தன் வாதத்துக்கு வலுச் சேர்க்க 1எம்டிபி, பொதுக் கணக்குக் குழுத் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட் தேசிய கணக்காய்வுத் துறையின் இடைக்கால அறிக்கையில் “சந்தேகத்துக்குரியதாக எதுவும் இல்லை” என்று கூறியதை அது சுட்டிக்காட்டியது.
ஆனால், நேற்று நூர் ஜஸ்லான் தாம் அவ்வாறு சொல்லவில்லை என்று மறுத்திருந்தார். அவர் அவ்வாறு சொல்லவில்லை என்பதை இடைக்கால அறிக்கை பற்றி நன்கு அறிந்த ஒரு வட்டாரமும் உறுதிப்படுத்தியது.
ஆதாரமற்றச் செய்திகளுக்காக வருத்தமா அல்லது நாளேட்டின் உரிமதிற்குத் தூக்குக்கயிறா?