பாஸ், டிஏபி: லவ் யாட் விவகாரத்தை இன விவகாரம் ஆக்காதீர்

incudentநேற்றிரவு  கோலாலும்பூர், புக்கிட்  பிந்தாங்கில்  நடந்த  சம்பவங்களை அடுத்து  அனைவரும்  அமைதி  காக்க  வேண்டும்  என  பாஸ்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

இனங்களுக்கிடையில்  அமைதி  காப்பது  அவசியம்  எனக்  கட்சித்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  குறிப்பிட்டார்.

“அனைவரையும், குறிப்பாக  புக்கிட்  பிந்தாங்கில்  உள்ளவர்களை அமைதி  காக்கும்படியும்  புதிதாக  சீண்டிவிடும்  நடவடிக்கைகளில்  ஈடுபட  வேண்டாம்  என்றும்  பாஸ்  வேண்டிக்  கொள்கிறது.

“பல  தலைமுறைகளாகக்  கட்டிக்காக்கப்பட்ட  நல்லுறவுகளை  உடைத்து  நாட்டின் பல்லின இணக்கத்தைச்  சிதறடித்து  விடாதீர்கள்”, என்று  ஹாடி  இன்று  ஓர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டார்.

நேற்றிரவு,  லவ் யாட் பிளாசா-வுக்கு  வெளியில்  கூடிய  சுமார்  200-பேர்   வன்செயல்களில்  ஈடுபட்டதை  அடுத்து செய்தியாளர்கள்  உள்பட  பலர்  காயமுற்றனர்.

போலீசார் பலரைக்  கைது செய்ததுடன்  புக்கிட்  பிந்தாங்கில்  உள்ள  இரவுநேரக்  கேளிக்கை  மையங்களையும்  மூடினர்.

சனிக்கிழமை லவ் யாட் பிளாசாவில் நிகழ்ந்த  ஒரு  திருட்டுச்  சம்பவத்தைத் தொடர்ந்து சச்சரவு வெடித்ததாக  தெரிகிறது.

இச்சம்பவத்தை காட்டும் காணொளிகள் இணையத்தில்  காட்டுத் தீ போல் பரவியதுடன்  அது  இப்போது ஓர் இனவாதப் பிரச்னையாகவும்  தோற்றம்  கண்டிருக்கிறது.

எதிரணி  தலைவர்கள்  பலரும்  இச்சம்பவத்தை  இனப்  பிரச்னையாக்க  வேண்டாம்  எனக்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.

பாஸ்  பாரிட்  புந்தார்  எம்பி  முஜாஹிட்  யூசுப்  ராவா, “பொறுப்பற்ற  தரப்புகள்  இதை  இனப்  பிரச்னையாக  உருவாக்கி  விடக்கூடும்”  என  எச்சரித்தார்.

“சமூக  வலைத்தளங்களைப்  பயன்படுத்துவோர்  இனவெறுப்புடன்  இவ்விவகாரத்தை  மேலும்  கிளறிவிட  வேண்டாம்  எனவும்  கேட்டுக்கொள்கிறேன்.

“சட்டத்தை  மீறுவோர்  சட்டப்படி  தண்டிக்கப்பட  வேண்டும்”, என்று  ஓர்  அறிக்கையில்  வலியுறுத்தினார்.

புக்கிட்  பிந்தாங்  டிஏபி  இளைஞர்  தலைவர்  ரூய்  வென்னும், இவ்விவகாரத்தை  இனப் பிரச்னையாக்கும்  முயற்சிகளைச்  சாடினார்.

“மலேசியர்கள்  விவகாரங்களை  இன ரீதியில்  பார்க்கும்  பழக்கத்தைக்  கைவிட  வேண்டும்”, என்று  கேட்டுக்கொண்ட  ரூய், அனைவரும்  அமைதியாக  இருக்க  வேண்டிக்  கொண்டார்.