‘பாஸ் தலைவர்கள் மைய நீரோட்ட ஊடகங்களுக்குப் பிரியமானவர்களாகி விட்டார்கள்’

leaderபாஸின்  உயர்த்  தலைவர்கள்  இருவர்  வரிந்து  கட்டிக்கொண்டு பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தற்காப்பதைப்  பார்க்கும்போது  டிஏபி-யுடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொண்ட பாஸ் ஷுரா  மன்றத்தின்  முடிவு  ஒரு  சாதாரண  நிகழ்வுதான்  என்கிறார்  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்.

அவ்விரு  தலைவர்களும்  இப்போது  மைய  நீரோட்ட  ஊடகத்தின்  அன்புக்குரியர்களாகி  விட்டார்கள்  என  லிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“பாஸ்  உயர்த்  தலைவர்கள்  இருவர்  நஜிப்பின்  முக்கிய  தற்காப்பாளர்களாக  உருவாகியிருப்பதுடன்  ஒப்பிட்டால்   ஷுரா  மன்றத்தின்  முடிவு  சாதாரணமானதுதான்.

“அவ்விரு  பாஸ்  தலைவர்களும்  அம்னோ  ஊடகங்களின்  அன்புக்குரியவர்கள்  ஆகிவிட்டார்கள். உத்துசான்  மலேசியா  இப்போது  அவர்களின்  பேச்சாளராக  மாறிவிட்டது”, என்று  லிம்  கூறினார்.

ஷுரா  மன்றத்தின்  முடிவு  தமக்கு வியப்பளிக்கவில்லை  என்று  கூறிய  அவர், பாஸ்  ஆன்மிக  தலைவர்  நிக்  அசீஸ்  உயிருடன்  இருந்திருந்தால்  அப்படி  நிகழ்ந்திருக்காது  என்றார்.