கைதியின் மரணம் குறித்து மெளனம் சாதிக்கும் சிஜே-க்கு இண்ட்ராப் கண்டனம்

hindrafஇண்ட்ராப் சிறைக்  கைதி   ஒருவர்  காலமாகி இரண்டு மாதங்கள்  ஆகியும் “வாயைப் பொத்திக்கொண்டிருக்கும்” தலைமை  நீதிபதி(சிஜே)க்குக்  கண்டனம்  தெரிவித்துள்ளது.

கைதியின்  மரணம்மீது  விசாரணை  நடத்த  வேண்டும்  என சிஜே-க்குக்  கடந்த  மாதம்  கடிதம்  அனுப்பப்பட்டதாகக்  கூறிய  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  கடிதத்துக்கு  இன்னும் பதில்  இல்லை  என்றார்.

“எஸ். சசிக்குமார்  மே  22-இல், சந்தேகத்துக்குரிய  முறையில்   இறந்து  போன  விவகாரத்தில்  நீதித்  துறை  மெதுவாகவும்  பொறுப்பற்ற  முறையிலும்  செயல்படுவது  கண்டு  அதிர்ச்சி  அடைகிறோம்.

“அவர்களின்  அலுவலகம்தான்  அக்கரையுடன்  செயல்பட்டிருக்க  வேண்டும்  ஆனால், நீதித்  துறை  மெளனம் காப்பது  வழக்கத்துக்கு  முரணாகவுள்ளது”, என்று  வேதமூர்த்தி  கூறினார்.

“சசிகுமாரின்  மரணத்துக்கு  உண்மையான  காரணத்தைத்  தெரிந்துகொள்ளும்  உரிமை  அவரின்  குடும்பத்தாருக்கு  உண்டு.

“நீதித்  துறையின்  மெளனம், நடக்கக்கூடாத  ஒன்று  நடந்துள்ளது  என்று  நினைக்கத்  தோன்றுகிறது”, என்றாரவர்.

கூட்டரசு  நீதிமன்றத்  தலைமைப்  பதிவாளர்  அலுவலகத்தின்  வழிகாட்டும்  விதிமுறைகள்,  சிறையில்  மரணம்  நிகழ்ந்தால் மரண  விசாரணை  ஒன்று  நடைபெற  வேண்டும்  என்பதைத்  தெளிவாகவே  கூறுகின்றன  என வேதமூர்த்தி  சுட்டிக்காட்டினார்.