வார இறுதி சச்சரவுகளால் நேற்று வெரிச்சோடிக் கிடந்த மின்னியல் பொருள் விற்பனைக்குப் பேர்போன லவ் யாட் பிளாசா இன்று வழக்க நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.
கடைக்காரர்கள் விற்பனைக்காக அவர்களின் பொருள்களை அழகாக அடுக்கி வைப்பதையும் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குமுன்னர் பேரம் பேசுவதையும் மலேசியாகினி கவனித்தது.
ஆனால், சச்சரவுக்கு மையமாக அமைந்திருந்த ஒப்போ ஸ்மார்ட்போன் கடையின் கதவுகள் மட்டும் திறக்கப்படாமல் மூடிக் கிடந்தன.
கைபேசி விற்பனை செய்யும் கடை ஒன்றின் ஊழியரான ஒருவர்- குமார் என்று மட்டும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்- இன்று காலை பல கடைகள் வியாபாரத்துக்குத் திறக்கப்பட்டதைக் கண்டதும்தான் பாதுகாப்பு உணர்வு வருகிறது என்றார்.
“இப்போது கூடுதல் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்கிறேன். வார இறுதி சச்சரவுகள் பயமூட்டின. ஞாயிற்றுக்கிழமைதான் மிகவும் மோசம். என் ‘போஸ்’ பொருள் இருப்பைக் கணக்கெடுக்க பின்னிரவு இரண்டு மணிக்கு அழைத்தார்”, எனப் பகுதிநேர ஊழியரான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இது போன்ற வன்முறைகள் நடைபெறாமல் இருக்க காவல் துறை கவனத்துடன் இருக்கும் என நம்புவோம்.