பிஎம்ஓ: ஆஸி ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது

ausie1999க்கும் 2004ஆம்  ஆண்டுக்குமிடையில்  நடந்த கையூட்டு  ஊழலில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சம்பந்தப்பட்டிருந்ததாக  ஆஸ்திரேலிய  செய்தித்தாள்கள்  கூறிக்  கொண்டிருப்பதைப்  பிரதமர்  அலுவலகம்(பிஎம்ஓ)  மறுத்துள்ளது.

ஆனால்,  பிஎம்ஓ, ஆஸ்திரேலிய  புலனாய்வாளர்களுடன்  ஒத்துழைக்க   மலேசிய  அதிகாரிகள்  மறுப்பதாக  தி  எட்ஜும்  சிட்னி  மார்னிங்  ஹரால்டும்  கூறியிருப்பது  குறித்துக்  கருத்துரைக்கவில்லை.

மலேசியாவைச்  சேர்ந்த  ஒரு  குழுவின்  நிதி  பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை  ஒப்படைக்குமாறு  காமன்வெல்த்  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  முறைப்படி கோரிக்கை விடுத்ததாக அவ்விரு  செய்தித்தாள்களும்  கூறின.

மலேசியாவுக்கு  polymer நோட்டுகளை  அச்சடித்துக்  கொடுக்கும்  குத்தகையை ஆஸ்திரேலிய  ரிசர்வ்  வங்கியின்  இரண்டு  நிறுவனங்களுக்குப்  பெற்றுத்  தருவதற்காக   அரசியல்-தொடர்புள்ள  தரகர்கள்  மலேசிய  அதிகாரிகளுக்குக்  கையூட்டுக்  கொடுத்தார்களாம்.

அத்தரகர்களுக்கும்  அப்போது  துணைப்  பிரதமராக  இருந்த  நஜிப்  அலுவலகத்திலும்  பிரதமராக  இருந்த  அப்துல்லா  அஹ்மட்  படாவி  அலுவலகத்திலும்  இருந்த  அதிகாரிகளுக்குமிடையில்  தொடர்புகள்  இருந்ததாகவும்  கூறப்பட்டது.

புத்ரா ஜெயா  உதவி  செய்ய  மறுப்பது, மலேசிய  அதிகாரிகளுக்குக்  கையூட்டுக்  கொடுக்கத்  திட்டமிட்ட   ரிசர்வ்  வங்கி  நிறுவனங்களின்  அதிகாரிகளின்மீது  வழக்குத் தொடுப்பதற்குத்  தடங்கலாக உள்ளது  என  அச்செய்திதாள்கள்  கூறின.

இதைப்  பற்றிக்  கருத்துரைத்த  பிஎம்ஓ, இது  நஜிப்பை   இடைத்தரகர்களின்  தவறான  செயலுடன்  இணைத்துக் கூறும்  ஒரு “முயற்சி”  என்று  குறிப்பிட்டது.