பெட்ரோசவூதி இண்டர்நேசனலிடமிருந்து திருடப்பட்ட ஆவணங்களை அதன் முன்னாள் இயக்குனர் சேவியர் எண்ட்ரி ஜுஸ்டோவிடமிருந்து விலைக்கு வாங்கிய 10 பேரடங்கிய ஒரு குழுவில் அம்னோ-வைச் சேர்ந்த ஒருவரும் இருந்ததாக சிங்கப்பூரின் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
தம்மிடமிருந்த தகவல்களை வெளியிடாமலிருக்க 2.5 மில்லியன் சுவீஸ் பிரான்க் கொடுக்க வேண்டும் என்று பெட்ரோசவூதியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்று, அது முடியாமல் போகவே தகவல்களை ஒரு குழுவிடம் விற்றுவிட்டதாக ஜுஸ்டோ கூறியதாக தாய்லாந்து போலீஸ் பேச்சாளர் ப்ரவுத் தவோன்சிரி கூறினார்.
“அதில் பலர், சுமார் 10 பேர் இருந்தார்கள். அவர்கள் ஊடகங்களையும் அரசியல் வட்டங்களையும் சேர்ந்தவர்கள். (மலேசியப்) பிரதமர் கட்சியைச் சேர்ந்தவரும் இருந்தார்”, என்றவர் கூறியதாக அந்தச் சிங்கப்பூர் நாளேடு தெரிவித்தது.
அந்தப் பதின்மரையும் அடையாளம் கூற ப்ரவுத் மறுத்தார். ஆனால், ஜுஸ்டோவிடமிருந்து தகவல்களை வாங்குவதற்கு சிங்கப்பூரிலும் தாய்லாந்திலும் பேரம் பேசப்பட்டதாக அவர் சொன்னார்.
தாங்கள் தேடும் தகவல்கள் ஜுஸ்டோவிடம் இருப்பது தெரிந்ததும் அவருக்குப் பணம் கொடுக்கும் வழிமுறைகள் பற்றியும் அவர்கள் விவாதித்தார்களாம்.
“வாட்ஸ் அப் வழி அவர்கள் நிறைய தடவை பேசிக் கொண்டார்கள். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன”, என்றார்.
தாய்லாந்து போலீசார் தாங்கள் கண்டறிந்த தகவல்களை மலேசிய மற்றும் சிங்கப்பூர் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் ப்ரவுத் கூறினார்.
























