தி எட்ஜ் நிதியியல் நாளேடு, 1எம்டிபி தொடர்பில் ஆகக் கடைசியாக வெளியிட்டிருக்கும் செய்தியில் அரசியல் சதி என்று கூறப்படுவதில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்திருப்பதுடன் செல்வந்தர் ஜோ லவ்வும் பெட்ரோசவூதி இண்டர்நேசனல் (பிஎஸ்ஐ) நிறுவனமும் மலேசியாவிடமிருந்து பில்லியன் கணக்கில் கொள்ளையிட வகுத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு திட்டத்தையும் நினைவுபடுத்தியது.
“உண்மையைக் கண்டறிவதும் அதை வெளியில் சொல்வதும் எங்கள் கடமை. 1எம்டிபி மீதான எங்களுடைய செய்திகள் மலேசியர்களையும் வெளிநாட்டவரையும் கொண்ட ஒரு கும்பல் மலேசிய மக்களிடம் பில்லியன் கணக்கில் மோசடி செய்ய திட்டமிட்டிருந்ததை அம்பலப்படுத்தின.
“எங்களுடைய அந்த வேலை எங்கனம் அரசியல் சதி ஆகும்?”, எனச் செய்தியுடன் வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பாளரின் குறிப்பு ஒன்று வினவுகிறது.
அந்த வணிக இதழ், நான்கு- பக்கச் செய்திக் கட்டுரையில் லவ் தேக் ஜோ என்ற பெயரைக் கொண்ட ஜோ லவ், பிஎஸ்ஐ- யுடன் சேர்ந்து எப்படி யுஎஸ்$1.83 பில்லியனை அமுக்கிக்கொள்ள திட்டமிட்டிருந்தார் என்பதையும் பிட்டுப் பிட்டு வைத்திருந்தது.
“இந்தச் செய்தி அறிக்கையில், இதுவே இவ்விவகாரம் தொடர்பில் வெளிவரும் இறுதி அறிக்கையாகக்கூட இருக்கலாம், 1எம்டிபி-க்கும் பிஎஸ்ஐ- க்குமிடையிலான மூன்றாண்டுக்கால வணிக உறவில் என்னென்ன நிகழ்ந்தன- குறிப்பாக 1எம்டிபி முதலீடு செய்த யுஎஸ்$1.83 ப்பில்லியன் என்னவானது என்பதை விலாவாரியாக விளக்கி இருக்கிறோம்”, என்றது கூறியது.
இந்த மோசடியை நிரூபிக்க வங்கி பணமாற்றத்தைக் காண்பிக்கும் ஆவணங்களும் அறிக்கைகளும் இருப்பதாகவும் அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் அவர்களுடன் ஒத்துழைக்கவும் தயாராக இருப்பதாகவும் தி எட்ஜ் கூறிற்று.