1எம்டிபி-யால் புத்ரா ஜெயாவை இழக்கப் போகிறது அம்னோ

losingபிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி, அம்னோ  தம்மையும்  மற்ற  எதிரணித்  தலைவர்களையும்  பழித்துரைப்பதைக் கண்டு  “குதூகலிக்கிறார்”.

“இப்படிப்பட்ட  எதிர்வினைகள் அம்னோ-வுக்கும்  பிஎன்னுக்கும்  எதிராக  மக்களின்  ஆத்திரத்தைக்  கிளறிவிடும். அதுவே  14வது  பொதுத்  தேர்தலில்  எதிரணியை  வெற்றிபெற  வைக்கும்”, என  அவர்  ஒர்  அறிக்கையில்  கூறினார்.

“1எம்டிபி  ஊழல்  என்பது  எதிரணியின் கட்டுக்கதை  என்று  நம்பும்  மலேசியர்கள்   இருந்தால்  அவர்கள்  நாடு நொடித்துப்  போகும்  நிலைக்கு  வந்துவிட்டதைக்  கண்டுகொள்ளாதிருக்கும்  அம்னோ  ஆள்களாகத்தான்  இருப்பார்கள்”, என்றாரவர்.

சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளத்தை  முடக்கும்  அரசாங்க  நடவடிக்கை  பற்றிக்  கருத்துரைத்தபோது  ரபிஸி  இவ்வாறு  கூறினார்.

1எம்டிபி  விவகாரத்தை “மூடி மறைக்கும்” முயற்சிகள்  அம்னோவைத்தான்  திருப்பித்  தாக்கும்  என்றவர்  எச்சரித்தார். அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அவரின்  அடிவருடிகளும்  அந்த  ஊழல்  தொடர்பில்  பல  கேள்விகளுக்குப்  பதிலளிக்க  முடியாமலிருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

ரிம2.6 பில்லியன்  எப்படி  நஜிப்பின்  சொந்தக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டது  என்பதற்கோ  எதற்காக  யுஎஸ்$1.83 பில்லியன்  பெட்ரோசவூதியுடன்  தொடர்புள்ள  தனிப்பட்டவர்களுக்கும்  ஜோ லவ்வுக்கும்  மாற்றிவிடப்பட்டது  என்பதற்கோ  இன்னும்  விடை  இல்லை.

அத்துடன் 1எம்டிபி அது  பெற்ற  ரிம42 பில்லியன்  கடனை   எப்படிச்  செலவிட்டது  என்று  நஜிப்போ  அவரின்  உதவியாளர்களோ  இதுவரை  விளக்கமளிக்கவில்லை  என்றும்  ரபிஸி  கூறினார்.

“இப்படிப்பட்ட  எளிய  கேள்விகளுக்கு  விடை  அளிக்கப்படாவிட்டால்  1எம்டிபி  பணத்தைச்  சிலர்  தங்களின்  சொந்த  ஆடம்பர  வாழ்க்கைக்காக  பயன்படுத்திக்  கொள்கிறார்கள்  என்ற  மக்களின்  நம்பிக்கைதான்  வலுப்படும்”, என்றாரவர்.