மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம், அதன் அலுவலகத்திலிருந்துதான் 1எம்டிபி மீது புலனாய்வு செய்யும் சிறப்புப் பணிக் குழு சேகரித்த தகவல்கள் கசிந்ததாக மலேசியா டூடே இணையத்தளம் கூறியிருப்பதை மறுத்துள்ளது.
எம்ஏசிசி முன்னாள் ஆலோசகர் ரேஷ்பால் சுங் ஜஸ்வாந்த் சிங், பணிக்குழு அதன் புலனாய்வில் திரட்டிய தகவல்களை சரவாக் ரிப்போர்டுக்குக் கசிய விட்டிருக்கிறார் என மலேசியா டுடே இணையத்தளம் நேற்று கூறியது.
“மலேசியா டுடே தெரிவித்திருப்பதை எம்ஏசிசி ஆணித்தரமாக மறுக்கிறது.
“ரேஷ்பாலுக்குத் தகவல் கிடைக்க வாய்ப்பில்லை. அவர் எம்ஏசிசி-இன் பணிகளைக் கண்காணிக்கும் எந்த அமைப்பிலும் உறுப்பினராக இல்லை”, என அந்த ஆணையத்தின் வியூகத் தொடர்பு இயக்குனர் ரொஹாய்ஸாட் யாக்கூப் ஒர் அறிக்கையில் கூறினார்.
“ரேஷ்பால் ஊழல்- தடுப்பு ஆலோசனை வாரியத்தில் முன்பு உறுப்பினராக இருந்தார். 2015, பிப்ரவரி 24-இல் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது”, என்றந்த அறிக்கை கூறியது.
“விதிமீறல்களுக்காக ரேஷ்பால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பதிலும் உண்மையில்லை.
“சொல்லப்போனால், அவர் எம்ஏசிசி-க்கு, குறிப்பாக 2009-இலிருந்து அதன் உருமாற்றத் திட்டத்திற்கு நிறைய பங்காற்றியிருப்பதால் எம்ஏசிசி நடவடிக்கை மதிப்பீட்டு வாரிய உறுப்பினராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார்”, என ரொஹாய்ஸாட் கூறினார்.
ஆனால், ரேஷ்பாலுக்கு வேறு பொறுப்புகள் இருந்ததால் அவர் அதை ஏற்கவில்லை என்றாரவர்.