சரவாக் ரிப்போர்ட் இணையத்தளத்தை முடக்கிவைத்துள்ளதுபோல் மகாதிரின் அகப்பக்கமான chedet.cc-ஐ முடக்கி வைக்கும் துணிச்சல் பிரதமர் நஜிப் அபதுல் ரசாக்குக்கு உண்டா என எதிரணி எம்பி ஒருவர் சவால் விடுத்துள்ளார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி), 1எம்டிபி பற்றி சரவாக் ரிப்போர்ட் தொடர்ந்து தகவல்கள் வெளியிட்டு வருவது அரசியல் நிலைத்தன்மையைக் குலைத்துவிடும் என்று கூறி அந்த இணையத்தளத்தை முடக்கிப்போட்டுள்ளது.
உண்மையில், சரவாக் ரிப்போர்ட்டின் தகவல்கள் 1எம்டிபிமீதுள்ள நம்பிக்கையைக் குறைத்துவிடும் என்ற அச்சம்தான் அந்த இணையத்தளத்தின் முடக்கத்துக்குக் காரணம் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி.
“1எம்டிபி பற்றித் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டுவரும் செல்வாக்குமிக்க இன்னொரு இணையத்தளம் chedet.cc என்பது அம்னோவுக்குத் தெரிந்த விசயம்தான். அதற்கும் ஒவ்வொரு நாளும் நிறைய வருகையாளர்கள் வருகிறார்கள்.
“அம்னோ, 1எம்டிபி பற்றிய செய்திகளை முற்றிலும் இருட்டடிப்புச் செய்வது என்பதில் தீவிரமாக இருந்தால் , இரட்டை நியாயம் கூடாது, chedet.cc தளத்தையும் முடக்க வேண்டும்”, என ரபிஸி கூறினார்.
அப்போதுதான் பொய்யான செய்திகளைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற புத்ரா ஜெயாவின் வாதத்தை ஏற்க முடியும். பார்க்கப்போனால், சரவாக் ரிப்போர்ட்டை விடவும் மோசமான முறையில் chedet.cc நஜிப்பைச் சாடி வருகிறது என ரபிஸி மலேசியாகினியிடம் குறிப்பிட்டார்.
மாமா மகாதீருடைய இணைய தளமான “CHEDET CC”-யை முடக்கினால், அவருக்கு “TUN” என்ற பட்டதை வழங்கியவரின் நிலைப்பாடு கேள்விக்குறியாதாகி விடும் என்பதை அறிந்தும்,
BN அரசாங்கத்தை “இருதலை கொள்ளி எறும்புபோல்” தவிக்க விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு இப்படி தர்ம சங்கடமான சவால்களை விடுத்து குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பி விடுவதில்தான் ரபிஸிக்கு என்ன மகிழ்ச்சியோ !
முடக்கம் செய்தால் அடக்கம் செய்து விடுவார்கள்! அடக்கித்தான் வாசிக்க வேண்டும்!