மக்கள் சிரிக்கப் போகிறார்கள், அம்னோ தலைவர் அழுகிறார்!

 

Rakyatwilllaughகுற்றச்சாட்டுகளால் துளைக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி நிறுவனம் மற்றும் பிரதமர் நஜிப் ரசாக் பற்றிய விசாரணையை சிறப்புப் பணிக்குழு விரைவுபடுத்த வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.

என்ன ஆனாலும் சரி, விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பது தமது கருத்து என்று மலேசியகினியிடம் கூறிய ரீஸால் மரைக்கான் நைனா மரைக்கான் “நாம் இப்போது மக்களின் நம்பிக்கை மற்றும் உளப்பாடுடன் விளையாடுகிறோம். நாம் இவ்விவகாரத்தைக் கையாளும் விதத்தைக் கண்டு மக்கள் சிரிக்கப் போகிறார்கள் என்பது எனது கவலை”, என்றார்.

இந்த விவகாரத்தில் உண்மையக் கண்டுபிடிக்க நியமிக்கப்பட்டிருப்பவர்கள் அனுதினமும் பேய்த்தனமாக தாக்கப்படுகின்றனர். “சட்டத்துறை தலைவர் தாக்கப்படுகிறார், போலீஸ் தலைவர், பேங்க் நெகாரா கவர்னர்…அடுத்து யார்?”, ரீஸால் கவலைப்படுகிறார்.

இவர்கள் எல்லாம் பிரதமர் அல்லது நிதி அமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள். இச்சிறப்பு பணிக்குழு எந்த அளவுக்கு சுயேட்சையாக செயல்படும் என்பது குறித்து அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன என்றாரவர்.

அதே சமயத்தில், இந்த விவகாரத்தில் சதித்திட்டங்கள் என்றெல்லாம் பேசப்படுகின்றன. அவற்றை எல்லாம் தற்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, உண்மை என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்குத்தான் தலையாய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ரீஸால் வலியுறுத்தினார்.