ஆயிரக்கணக்கானவர் திரண்டு சரவாக் சுதந்திர நாளைக் கொண்டாடினர்

sasபோலீஸ்  படைத்  தலைவரின் எச்சரிக்கையைப்  புறக்கணித்து  ஆயிரக்கணக்கான  மக்கள்  இன்று  கூச்சிங்  தெருக்களில்  ஒன்றுதிரண்டு  சரவாக்கின்  52-வது  சுதந்திர  நாளைக்  கொண்டாடினர்.

2013-இல்  இக்கொண்டாட்டம்  தொடங்கியதிலிருந்து  இன்று  திரண்டதுதான்  மிகப்  பெரிய  கூட்டமாகும்.

கூட்டத்தினர்  ஜூபிளி  விளையாட்டுத்  திடலில்  திரண்டு  அங்கிருந்து   சொங்  கெங்  ஹாய்  ரக்பி  திடலுக்கு  ஊர்வலமாகச்  சென்றனர். காலை  11  மணி  அளவில்  கூட்டம்  கலைந்தது.

கூட்டத்தினர்  இப்போதைய  சரவாக்  கொடியையும்  1963-இலிருந்து 1973வரை  பயன்படுத்தப்பட்ட  கொடியையும்  ஏந்திச்  சென்றதாக  சிலர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தனர்.

மற்றவற்றோடு  கூட்டத்தினர்,  கூடுதல்  எண்ணெய்  உரிமப்  பணம்  வேண்டும்  என்றும்   வரிவிதிப்பு, போலீஸ் துறை, சுகாதாரம், கல்வி  ஆகியவற்றில்  கூடுதல்  அதிகாரம்  தேவை  என்றும்  கோரிக்கை  விடுத்தனர்.

இப்பேரணியை சரவாக்  டாயாக்  இபான்  சங்கமும்  சரவாக்  சரவாக்கியர்களுக்கே சங்கமும்(எஸ்4எஸ்) சேர்ந்து  நடத்தின.

ஜூலை 22ஆம்  நாளை  பொது  விடுமுறை  நாளாக  அறிவிக்க  வேண்டும்  என்பதை  அதிகாரிகளுக்கு  வலியுறுத்துவதும்  சரவாக்கியர்களுக்கு  அவர்களின்  வரலாற்றை  நினைவுறுத்தவுமே இந்நிகழ்வில்  நோக்கமாகும்  என  அதன்  ஏற்பாட்டாளர்  பீட்டர்  ஜோன்  ஜபான்  தெரிவித்தார்.

நேற்று போலீஸ்படைத் தலைவர்  காலிட் அபு பாக்கார்  செய்தியாளர்களிடம்  பேசியபோது,  பேரணி சரவாக்கை மலேசியாவிலிருந்து பிரிக்கும்  நோக்கத்தைக்  கொண்டிருப்பதுபோல்  தெரிவதால்  அதை நடத்தக்  கூடாது  என்று   எச்சரித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.