பெர்சே: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பயணத் தடை போடுவது கொடூரமானது, வழக்கத்தில் இல்லாதது

berகொலைகாரர்கள்  என்று  தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்  நாட்டைவிட்டுத்  தப்பியோட  முடிகிறதுபோது  ஜனநாயக  முறைப்படி  தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசியல்வாதிகளுக்குப் பயணம்  செய்வதற்குக்  கட்டுப்பாடு  விதிக்கப்படுவது  ஏன்  எனத்  தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பான  பெர்சே  கேள்வி  எழுப்பியுள்ளது.

கூட்டரசு  அரசியலமைப்பு  பயணம்  செய்வதற்கு  உரிமை  வழங்கும்போது, ‘மேலிட  உத்தரவு’  எனக் கூறி அதைத் தடுத்து  நிறுத்துவது  எப்படி  சட்டப்படி  நியாயமாகும்  என  அது  வினவியது.

“சமூக  ஆர்வலர்களும்  ஜனநாயக  முறைப்படி  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளும்  குடிநுழைவுத்  துறையைக்  கேட்டுவிட்டுத்தான்  நாட்டைவிட்டு  வெளியேற  வேண்டும்  என்பதற்குக்  காரணம்   என்ன?

“வேடிக்கை  என்னவென்றால்,  அல்டான்துன்யா ஷரீபுவின்  கொலைகாரனான  சிருல்  அஸ்கார்  உமர்  ஆஸ்திரேலியாவுக்குத்  தப்பியோட  முடிகிறது”, என  பெர்சே  ஓர்  அறிக்கையில்  கூறியது.

1எம்டிபி  விவகாரத்தை  விமர்சித்த  டோனி  புவா,  தி  எட்ஜ்  ஊடகக்  குழுமத்  தலைவர்  தோங்  கூய்  ஒங்  ஆகியோருக்கு  விதிக்கப்பட்டிருக்கும்  பயணக்  கட்டுப்பாடு  பற்றிக்  கருத்துரைத்தபோது  அது  இவ்வாறு  கூறியது.