பெட்ரோசவூதி இண்டர்நெஷனல் நிறுவனத்திடமிருந்து தாம் திருடிய முக்கிய ஆவணங்களில் “மாற்றம் செய்வதற்கு” சரவாக் ரிப்போர்டும் மலேசிய தொழில் அதிபர் ஒருவரும் திட்டமிட்டிருந்ததாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சேவியர் எண்ட்ரி ஜஸ்டோ தெரிவித்துள்ளார்.
அந்த ஆவணங்களை யுஎஸ்2 மில்லியனுக்கு விற்பதற்கு அவ்விரு தரப்பினரிடமும் தாம் ஒப்புக்கொண்டதாக ஜஸ்டோ கூறினார்.
“அசலான ஆவணங்களை எந்த மாற்றமுமின்றி அவர்களிடம் கொடுத்தேன்”, என்றவர் சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார். பெங்கோக் சிறையில் இந்த நேர்காணல் நடைபெற்றிருக்கிறது.
தாம் சந்தித்தவர்கள் அந்த ஆவணங்களைக் கொண்டு “மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பது” பற்றிப் பேசியதாகவும் “ஆவணங்களில் திருத்தம் செய்யும்” திட்டமும் அவர்களிடம் இருந்தது என்றும் ஜஸ்டோ கூறினார்.
இதன் தொடர்பில், சரவாக் ரிப்போர்ட் தலைமைச் செய்தியாசிரியர் ரியுகாஸல்- பிரவுனை ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்ட பேசியபோது அவர் ஜஸ்டோ கூறியதை வன்மையாக மறுத்தார்.
“நான் எதற்காக எதையும் மாற்ற வேண்டும்? அப்படி நான் செய்திருந்தால் 1எம்டிபி-யும் பெட்ரோசவூதியும் கடந்த ஐந்து மாதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதற்கான சான்றுகளைக் காண்பிக்காமலிருந்தது ஏன்?”, என்றவர் வினவினார்.
திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி 1எம்டிபி ஊழல் பற்றி செய்தி வெளியிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிதியியல் நாளேடான தி எட்ஜும் அக்குற்றச்சாட்டை மறுத்தது.
“நாங்கள் எதையும் திருடவில்லை. யாருக்கும் பணமும் கொடுக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்த மின்னஞ்சல்களிலோ ஆவணங்களிலோ மாற்றங்களையும் செய்யவில்லை”, என அந்நாளேட்டில் 1எம்டிபி பற்றி நான்கு-பக்க செய்தியுடன் ஆசிரியரின் குறிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
நீர் வேண்டுமென்றால், கிடைத்த தகவலைக் கொண்டு நல்ல பேரம் பேசி இருக்கலாம். ஏன், கோடீஸ்வரர்களில் ஒருவராக கூட உமது பெயரையும் பதித்திருக்கலாம்!!! வரிப் பணம் கட்டும் மலேசியா மக்களின் பால் அக்கறை கொண்டு உண்மையை வெளி கொணர பொறுப்புடன் நடந்தமைக்கு வாழ்த்துகள்!!!