முற்போக்குவாதிகளே மலேசியாவை காப்பாற்ற வாருங்கள், அழைக்கிறார் கிட் சியாங்

 

Kitinvitesபாஸ் கட்சியை விட்டு விலகி கெராக்கான் ஹரப்பான் பாரு (ஜிஎச்பி) அமைப்பை தோற்றுவித்தவர்கள் புதிய அரசியல் கட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கையில், டிஎபியின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் பாரிசானிலுள்ள முற்போக்குவாதிகள் இந்த புதிய அரசியல் கூட்டணியில் இணந்துகொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல், சமூக-பொருளாதார அநீதிகள் மற்றும் நல்லாட்சி இல்லாமை ஆகியவற்றால் “தோல்வியுற்ற நாடு” என்ற நிலையை அடைவதிலிருந்து மலேசியாவை காப்பாற்ற அவர்கள் தங்களுடைய அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வருவார்கள் என்று கிட் சியாங் நம்புகிறார்.

அம்னோவிலும் பாரிசானிலும் முற்போக்கு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மலேசியாவை காப்பாற்ற முன்வர வேண்டும் என்றாரவர்.

மலேசியா ஒரு தோல்வியுற்ற நாடாவதிலிருந்து அதைக் காப்பற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்து முற்போக்கு அரசியல் தலைவர்களும் ஒரு மாபெரும் ஒன்றுகூடலை நடத்த வேண்டும். அவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் சரி – அம்னோ அல்லது பாரிசான், பாக்கத்தான் ரக்யாட்டின் புதிய அமைப்பான பாக்கத்தான் ராக்யாட் 2.0 அல்லது புதிய பாக்கத்தான் ரக்யாட், ஹரப்பான் ராக்யாட், இறுதியில் எந்த பெயரில் தோன்றினாலும் சரி – அவர்கள் மலேசியாவின் முற்போக்கு சக்திகள் மற்றும் தனிப்பட்டவர்களுடன் இணைய வேன்டும் என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

கடந்த மார்ச்சில், மலேசியாவை காப்பாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கிட் சியாங் கோரிக்கை விடுத்திருந்தார்.

பாக்கத்தானில் ஏற்பட்டிருந்த சச்சரவுகளினால் அவரது அறைகூவல்கள் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அவர், தற்போது பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அமைத்துள்ள ஜிஎச்பி ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டிருப்பது புதிய நம்பிக்கை அளிக்கிறது என்றார்.

மலேசிய முற்போக்குவாதிகளின் ஒரு புதிய கூட்டணி பிறக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. டிஎபி அனைத்து முற்போக்கு அரசியல் சக்திகளுடனும் பிகேஆர் மற்றும் ஜிஎச்பி அமைக்கவிருக்கும் புதிய கட்சி போன்றவற்றுடனும் இணைந்து மலேசியாவை காப்பாற்ற ஒத்துழைக்கும் என்று லிம் கிட் சியாங் மேலும் கூறினார்.