முகைதின் பேச்சு அம்னோ நாளேடுகளில் வெளிவரவில்லை

utusanஅம்னோ துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  நேற்று ஆற்றிய  அனல் பரக்கும்  உரையை  அம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியா  வெளியிடவில்லை.

நேற்று  மாலை  செராஸ்  அம்னோ  தொகுதியின்  ஆண்டுக்  கூட்டத்தில் பேசிய  முகைதின்  யாசின்,  1எம்டிபி-இன்  காரணமாக  கட்சி  நெருக்கடியை  எதிர்நோக்குவதாகக்  குறிப்பிட்டார்.

விரைவில் ஒரு  பொதுத்  தேர்தல்  நடந்தால்  அம்னோ  தோற்றுப்போகும் என்றுகூட  அவர்  சொன்னார்.

இன்றைய  உத்துசான்  மலேசியாவைத்  தேடிப்பார்த்தில்   முகைதினின்  பேச்சோ  செராஸ்  அம்னோ  தொகுதிக்  கூட்டம்  பற்றிய செய்தியோ காணப்படவில்லை.

மாறாக, தி  எட்ஜ்  நாளேட்டுக்கு  உள்துறை  அமைச்சு விதித்த  தடையைத்  தற்காக்க  வேண்டும்  என்ற  செய்திகளும்  உறுப்பினர்கள்  ஒன்றுபட  வேண்டும்  என்று அம்னோ  தலைவர்கள்   விடுத்துள்ள கோரிக்கைகளும்  மட்டுமே  அதில்  இடம்பெற்றிருந்தன.

அம்னோ  தொடர்புள்ள  மற்றொரு  நாளேடான  பெரித்தா  ஹரியான்  முகைதின்  பேச்சை  வெளியிட்டிருந்தது. அவர்  1எம்டிபி  மீதான  இடைக்கால  அறிக்கையைப்  பொதுவில்  வெளியிட  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டிருந்த  செய்தி  வெளியாகி  இருந்தது. ஆனால்,    தேர்தல்   நடந்தால்  கட்சி தோற்றுப்  போகும்  என்றவர்  எச்சரித்ததைக்  காணவில்லை.

நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸும்  முகைதின்  பேச்சுக்கு  முக்கியத்துவம்  கொடுக்கவில்லை.