பிரதமர்: புத்தாக்க சிந்தனைகளை பின்பற்றுங்கள் அபாயங்களை ( RISK) எதிர்கொள்ள அஞ்ச வேண்டாம்

மலேசியர்கள் புத்தாக்க சிந்தனையாளர்களாக உருவாவதற்கு துணிச்சலைப் பெற்றிருக்க வேண்டும் என நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

புத்தாக்கர் ( innovator ) புதிய வழிகளைத் தேடுவாரே தவிர மற்றவர்கள் விட்டுச் சென்ற பாதையில் செல்ல மாட்டார் என்றார் அவர்.

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், வாக்மேனைக் கண்டு பிடித்த அக்கியோ மொரித்தா, பான் அமெரிக்கன் வோர்ல்ட் ஏர்வேஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்த யுவான் டிரிப் ஆகிய கடந்த கால புத்தாக்கர்கள் மறைந்த போது அதன் தாக்கத்தை உலகம் பெரிதும் உணர்ந்ததை நஜிப் சுட்டிக் காட்டினார். காரணம் அவர்களுடைய புத்தாக்க சிந்தனைகளினால் உலகம் பெரிதும் பயனடைந்துள்ளது.

“ஆகவே ஸ்டீவ் ஜாப்ஸ், அக்கியோ மொரித்தா, யுவான் டிரிப் ஆகியோர் விட்டுச் சென்ற பாரம்பரியம் என்னைச் சிந்திக்கத் தூண்டியது,” என நஜிப் www.1malaysia.com.my. என்னும் வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

அவர்கள் முன்மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டு தங்கள் சிந்தனைகள் மூலம் உலகை மாற்றியவர்கள் என வரலாற்று ஏடுகளில் மலேசியர்களும் இடம் பெறுவர் என நஜிப் நம்புகிறார்.

“இப்போது பேராசிரியர் ஹாலிமாத்தோன் ஹம்டான், புவா கெய்ன் செங், டோனி பெர்னாண்டஸ் போன்ற மலேசியர்கள் நானோ தொழில்நுட்பம், புள்ளிவிவரக் களஞ்சியம், விமானப் பயணம் ஆகிய துறைகளில் புத்தாக்க சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டு வந்துள்ளனர்.”

“அந்த நம்பிக்கையுடன் நான் 2012ம் ஆண்டை தேசியப் புத்தாக்க இயக்க ஆண்டாக நான் அறிவித்தேன். அதன் கீழ் பல வியூக அடிப்படை முயற்சிகளுக்கு 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார் நஜிப்.

“புத்தாக்கர் என்பவர் இயல்புக்கு மாறான கருத்துக்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறார். பெரும்பாலான மக்கள் பிரச்னை எனக் கருதும் விஷயங்களை அவர் வாய்ப்பாக கருதுவார்.”

-பெர்னாமா