முகைதின் காணொளிமீது நடவடிக்கை எடுக்காத ஜாஹிட்டைச் சாடுகிறார் எம்பி

videoமுன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைகூறும்  காணொளிமீது  விசாரணை  நடத்தாத  உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடியை  எதிரணி  எம்பி  ஒருவர்  சாடினார்.

“குறைந்த  பட்சம்,  போலீஸ்  முகைதினையும் கசிந்துள்ள  காணொளியில்  காணப்படும்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரையும் கூப்பிட்டனுப்பி  அவர்களின்  வாக்குமூலத்தையாவது  பதிவு  செய்திருக்க  வேண்டும்.

“பிரதமரைக்  குறைகூறுவோரும்  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  முனைவோரும் சட்டத்தின்  முழு  வீச்சை  எதிர்நோக்க  நேரும்  என  மிரட்டும் ஜாஹிட்டும்  போலீஸ்  படைத் தலைவரும்(ஐஜிபி) அவர்களிடம்  வேறு  மாதிரி  நடந்து  கொள்ளக்  கூடாது”, என்று  அலோர்  ஸ்டார்  எம்பி  கூய்  ஹிஸ்யாவ்  லியோங்  கூறினார்.

முகைதின் அப்போது  நாட்டின்  இரண்டாவது  தலமைப்  பதவியில்  இருந்தார்  என்பதால்  அவரது  பேச்சைச்  சாதாரணமாக  எடுத்துக் கொள்ளக்கூடாது  என  அந்த  பிகேஆர்  உச்சமன்ற  உறுப்பினர்  சொன்னார்.

அக்காணொளியில்  முகைதின்,  நஜிப்பின்  கணக்கில்  ரிம2.6 பில்லியன்  போடப்பட்ட  விவகாரம்  தமக்குத்  தெரியும்  என்று  கூறியிருப்பதைப்  பதவிநீக்கம்  செய்யப்பட்டதால்  மனம்  உடைந்துபோன  ஒரு  மனிதரின்  பேச்சு  என  ஜாஹிட்  நேற்று  கூறியிருந்தார்.

அதனால், காணொளி  தொடர்பில்  முகைதின்மீது  போலீஸ்  விசாரணை  மேற்கொள்ளாது  எனப்  புதிதாக  நியமிக்கப்பட்ட  தூணைப்  பிரதமருமான  ஜாஹிட்  கூறினார்.