அந்நியக் குடியேற்றக்காரர்கள் ஐயத்துக்குரிய வழிகளில் பெற்ற அனைத்து அடையாளக் கார்டுகளையும் அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என பிபிஎஸ் எனப்படும் பார்ட்டி பெர்சத்து சபா தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் யோசனை கூறியிருக்கிறார்.
சபா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்புக்கள் அடிக்கடி எழுப்பி வரும் ‘அடையாளக் கார்டு திட்டம்’ பற்றிய விவகாரத்தை சமாளிப்பதற்கு அந்த நடவடிக்கை உதவும் என அவர் கருதுகிறார்.
அடுத்த ஆண்டு தொடக்கம் புதிய அடையாளக் கார்டுக்கு மாறும் முறையும் மேலும் விளக்கப்பட வேண்டும் என்றும் பிபிஎஸ் விரும்புவதாக அவர் சொன்னார்.
“ஐயத்துக்குரிய வழிகளில் குறிப்பாக சபாவில் பெறப்பட்ட கார்டுகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு அந்த முறை பயன்படுத்தப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை.”
“அந்த அடையாளக் கார்டுகளை மாற்றும் போது பிறப்புச் சான்றிதழ் போன்ற கூடுதலான ஆவணங்களும் இருக்க வேண்டும். தகுதி பெற்றவர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே புதிய அடையாளக் கார்டுகளைப் பெறுவதை உறுதி செய்ய அது உதவும்,” என அவர் 26வது பிபிஎஸ் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து ஆற்றிய தலைவர் உரையில் கூறினார்.
சபாவில் கள்ளக் குடியேறிகள் பிரச்னையை ஆராய அரச விசாரணை ஆணையம் ஒன்றை அடுத்த ஆண்டு அமைக்குமாறு பிபிஎஸ் கூறும் யோசனையை கூட்டரசு அரசாங்கம் நல்ல எண்ணத்துடன் ஏற்றுக் கொள்ளும் எனத் தாம் நம்புவதாகவும் பைரின் குறிப்பிட்டார்.
சபாவில் பிலிப்பீன்ஸ் துணைத் தூதரகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் பிபிஎஸ் விரும்புவதாகவும் அவர் சொன்னார். பிலிப்பினோ மக்களுக்கு பயணப் பத்திரங்களை விரைவாக பரிசீலிக்க அந்த நடவடிக்கை உதவும்.
13வது பொதுத் தேர்தல் பற்றிக் குறிப்பிட்ட பைரின், தனக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதின் மூலம் தேசிய முன்னணியின் வெற்றிக்கு பங்காற்ற முடியும் என பிபிஎஸ் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
-பெர்னாமா