எம்எசிசிக்கு மலேசியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்

 

embattledmaccபிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் ரிம2.6பில்லியன் குறித்து விசாரித்து வரும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் 1,000 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் எதிரணி மற்றும் சிவில் சமூக தலைவர்களுடன் அம்னோவின் ஒரு முன்னாள் துணை அமைச்சரும் பங்கேற்றனர்.

“இங்கிருந்து எங்கே போகிறோம்” என்ற தலைப்பைக் கொண்ட அக்கருத்தரங்கில் பேசிய டிஎபியின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங், எம்எசிசியின் தலைவர் பஹாரி முகமட் ஸின் அவரது அமைப்பு மேற்கொண்டிருக்கும் விசாரணையை தகர்ப்பதற்கு போலீசாருக்கு யார் உத்தரவிட்டது என்பதை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுத்திருந்த அறிக்கை முழுவதையும் வாசித்தார். எம்எசிசி சிறிய மீன்களைப் பிடிப்பதில்தான் ஈடுபாடு காட்டி வருகிறது என்று தாம் அந்த அமைப்பை குறைகூறி வந்துள்ளதை நினைவு கூர்ந்த கிட் சியாங், அது தாக்கப்படும் போது அதற்கு உதவுவது நமது கடமையாகும் என்றார்.

அந்த அமைப்பின் அதிகாரிகளுக்கு தம்முடைய ஆதரவை தெரிவிப்பதற்காக தாம் இன்று எம்எசிசியின் தலைமையகத்திற்கு செல்லப் போவதாக கிட் சியாங் மேலும் கூறினார்.

பிரதமர் நஜிப்பின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் ரிம2.6பில்லியன் குறித்து அவரை எம்எசிசி விசாரிக்கும் என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் எம்எசிசி கூறியது.

இது வரையில், எஸ்ஆர்சி இன்டர்நேசனல் சென்ட். பெர்ஹாட் மற்றும் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்த ரிம2.6பில்லியன் சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டிருந்த எம்எசிசியின் ஏழு அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர் அல்லது விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இக்கருத்தரங்கில் பேசிய அம்பிகா அம்னோ இதுவரையில் நம்பியிருந்த ஓர் அமைப்பையே தாக்கும் அளவிற்கு அதன் தரம் கெட்டு விட்டது என்றார்.

இது கடந்த ஒரு வாரமாக நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர் அம்னோவுக்கும் வரம்பு உண்டு என்று மேலும் கூறினார்.

தங்களுடைய கடமையை ஆற்றும் மக்களை கைது செய்வதா என்று கேட்ட அம்பிகா, இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றார்.

முன்னாள் துணை அமைச்சரான சைபுடின் அப்துல்லா தங்களுடைய கடமையை ஆற்றும் அரசு ஊழியர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தார்.