பிகேஆர்: ஸெட்டிமீது தவறான முறையில் விசாரணை மேற்கொண்டால் ரிங்கிட் பாதிப்புறும்

zeபோலீசார் பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்டார் அசீஸை  விசாரிப்பதென  முடிவு  செய்தால்  விசாரணை முழுக்க  முழுக்க  வெளிப்படையாக  நடக்க  வேண்டும்  என  பிகேஆர்  வர்த்தக,  முதலீட்டுப்  பிரிவு  வலியுறுத்தியுள்ளது.

ஸெட்டி  அனைத்துலக  நிதி  வட்டாரங்களில்  நன்கு  மதிக்கப்படுபவர். அவருக்கு  எதிராக  எடுக்கப்படும்  அரசியல்  நோக்கம்  கொண்டதாகக்  கருதப்படும்  எந்தவொரு  நடவடிக்கையும்  ஏற்கனவே  நலிவடைந்துள்ள  ரிங்கிட்டுக்குப்  பாதகமாக  அமையும்  என  அப்பிரிவின்  தலைவர்  வொங்  சென்  கூறினார்.

“ரிங்கிட்  ஏற்கனவே  பலவீனமடைந்துள்ளது. இந்நிலையில்  ஸெட்டியை  விசாரணைக்காகக்  கைது  செய்தால்,  அதையும்  தவறான  முறையில்  செய்தால், அது  அனைத்துலக  அளவில்  பிரச்னையை  உண்டுபண்ணலாம்.

“போலீஸ்  ஸெட்டியை  விசாரணை  செய்யக்  கூடாது; கைது  செய்யக்கூடாது  என்று  சொல்லவில்லை. முறைப்படிச்  செய்ய  வேண்டும்  என்றுதான்  கூறுகிறோம். அவரரைக்  கைது  செய்வதாக  இருந்தால்  அதற்கான  காரணத்தை  வெளிப்படையாக  தெரிவிக்க  வேண்டும்.

“ஸெட்டி  வெளியேறுவார்  என்று  இணையத்தில்  பலவாறாகக்  கூறப்படுகிறது. அதை  நான்  நம்பவில்லை. ஆனால், ஸெட்டியை  விசாரிப்பதாக  இருந்தால்  தயவு  செய்து  வெளிப்படையாகச்  செய்யுங்கள்”, என்றவர்  கேட்டுக்கொண்டார்.