புதிய டிஏபி கட்டிடத்துக்குப் பணம் எங்கிருந்து வந்தது? அம்னோ இளைஞர்கள் கேள்வி

buildingபினாங்கு  அம்னோ  இளைஞர்  பகுதி,  அந்தத்  தீவில்  மாநில டிஏபி  பல மில்லியன்  ரிங்கிட்  செலவில்  கட்டிய  அலுவலகக்  கட்டிடத்துக்குப்  பணம்  எங்கிருந்து  வந்தது  எனக்  கேள்வி  எழுப்பியது.

2008-இல்  லிம்  குவான்  எங்  முதலமைச்சராக  வந்த  இரண்டாண்டுகளில்   கட்டப்பட்ட  அக்கட்டிடத்துக்குப்  பணம்  வந்த  விதத்தை   டிஏபி  தெரிவிக்க  வேண்டும்  என  பினாங்கு  அம்னோ  இளைஞர்  தலைவர்  ரபிசால்  அப்துல்  ரஹிம்  கூறினார்.

2008  பொதுத்  தேர்தல்வரை  ஆட்சி  செய்த  கெராக்கான்  அதன்  தலைமையகக்  கட்டிடத்தைக்  கட்டி  முடிக்க  12  ஆண்டுகள்  ஆயின. அதுவும்கூட  ஒரு  சாதாரண கட்டிடம்தான்  என்றாரவர்.

டிஏபி பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன்  எப்படி  வந்தது  என்று  கேள்வி  எழுப்புவதால்தான் தானும்  அந்தக்  கோரிக்கையை  முன்வைப்பதாக  ரபிசால்  தெரிவித்தார்.

“வெளிப்படைத்தன்மைக்கு  அவர்கள்  கோரிக்கை  வைப்பதால்  அவர்களும் வெளிப்படையாக  நடந்துகொள்ள  வேண்டும்.

“இரண்டே  ஆண்டுகளில்  ஒரு  புதிய  தலைமையகம்  கட்ட  முடிந்தது  எப்படி? அதற்குப்  பணம்  எங்கிருந்து  வந்தது”, என்றவர்  வினவியதாக  அம்னோ  ஆன்லைன்  கூறியுள்ளது.

“அவர்கள் பதில்  சொல்ல  மறுத்தால் அவர்கள்  வாயைப்  பொத்திக்  கொண்டிருக்க  வேண்டும். மற்றவர்களுக்குப்  பணம்  எங்கிருந்து  வந்தது  எனக்  கேள்வி  கேட்கக்  கூடாது”, என்றாரவர்.