ஊட்டிய கையைக் கடிக்காதீர், நஜிப் வேண்டுகோள்

 

Najibdontbiteநஜிப்பின் விசுவாசிகள் அவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் அம்னோவுக்காக அளிக்கப்பட்ட நன்கொடை என்பதை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, தாம் தேடிப் பெற்ற நிதியிலிருந்து அம்னோ தலைவர்களும் பயனடைந்துள்ளதை அவர்களுக்கு இன்று நஜிப் நினைவுறுத்தினார்.

அவ்வாறு பயனடைந்தவர்கள் தாம் தாக்கப்படும் போது   எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடாது என்று நஜிப் கூறினார்.

“கட்சியின் தலைவர் என்றமுறையில், நான் எதைச் செய்தாலும், அது கட்சிக்கு நிதி திரட்டுவதோ, வேறு எந்த விவகாரமோ, அது கட்சியின் நன்மைக்காக மட்டுமே ஆகும். அது வேறு எந்த நோக்கங்களுக்காகவும் இல்லை”, என்று நஜிப் கூறினார்.

தமது தலைமைத்துவத்தின் கீழ், பல அம்னோ தொகுதிகள் ஏராளமான உதவிகளைப் பெற்றுள்ளன. பலர் ஹாஜ் யாத்திரைக்கு செல்ல முடிந்தது. பல தொகுதிகளுக்கு ஒவ்வொரு மாதம் உதவிகள் வழங்கப்பட்டன என்று நஜிப் அம்னோ தொகுதிகளுக்கு அளித்தவற்றை விவரித்தார்.

மௌனமாக இருக்காதீர்

“அவற்றை பெற்றுக் கொண்ட பிறகு மௌனமாக இருக்காதீர். அதைவிட மோசமாக, நான் தாக்கப்படும் போது அந்த நெருப்பில் எண்ணெய் வார்க்காதீர்”, என்று அம்னோ பண்டார் துன் ரசாக் தொகுதி ஆண்டுப் பொதுக்கூட்டத்தை இன்று தொடக்கி வைத்து பேசுகையில் நஜிப் கூறினார்.

“நாம் கட்சியை தற்காக்க வேண்டும், ஏனென்றால் நான் செய்திருப்பது எனது சுயநலத்திற்காக அல்ல. அது கட்சிக்காக”, என்று நஜிப் வாதிட்டார்.

அம்னோவின் நிதி பற்றி எதிரணியினருக்கு தெரிய வேண்டும் என்றால், அவர்களும் அவர்களுடைய நிதி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறிய நஜிப், அது உள்ளூரிலிருந்தே வருகிறதா, சில தவக்கேகளிடலிருந்து வருகிறதா, உடம்பு பிடிப்பு நிலையங்களிலிருந்து வருகிறதா அல்லது வெளிநாட்டிலிருந்து வருகிறதா என்பது நமக்குத் தெரிய வேண்டும் என்றார்.

அம்னோவின் கணக்கை காட்டத் தயார்

தாம் அம்னோவின் கணக்கை காட்டத் தயாராக இருப்பதாக கூறிய நஜிப், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு என்றார். அதாவது, எதிரணியும்sack அவ்வாறே செய்ய வேண்டும் என்பதாகும்.

ஆகவே, தாம் நாட்டை விற்பதாக கூறக்கூடாது. “நான் அதைச் செய்யவே மாட்டேன். நான் ஒரு பிரதமர், நான் எதைச் செய்தாலும் அதற்குப் பொறுப்பாளாராக வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

தாம் நிதி அல்லது நன்கொடை ஆகிய எதைப் பெற்றுக்கொண்டாலும், அது குத்தகைகள் அல்லது அது போன்ற எதற்கும் கைமாறாக அல்ல.

“அதனால்தான், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிஎசி) அது ஊழலும் அல்ல, 1எம்டிபி நிதியிலிருந்தும் வரவில்லை என்று கூறியுள்ளது. அது (விசாரணை) முடிந்து விட்டது.

“ஆகவே, நான் செய்தது தவறு என்று எண்ணாதீர்கள். நான் அதைக் கட்சிக்காக செய்தேன். நான் இதரப் பிரச்சனைகள் தலையெடுப்பத்தைத் தவிர்க்க விரும்பினேன்”, என்றார் நஜிப்.