‘அரசியல் குறுக்கீட்டுக்கு இடந்தரக்கூடாது’- போலீசுக்கு சுஹாகாம் வலியுறுத்து

suhakamபோலீஸ்  எந்தவொரு  அரசியல்  தலையீட்டுக்கும்  இடந்தராமால் செயல்பட  வேண்டும்  என  மனித  உரிமை  ஆணையம்(சுஹாகாம்)  வலியுறுத்துகிறது.

“போலீஸ், காவல்  பணிகளைச்  செய்வதில்  அரசியல்  குறுக்கீடு  எதுவுமின்றிச்  சுதந்திரமாகச்  செயல்பட  வேண்டும், மற்ற  குடிமக்களைப்  போலவே  சட்டத்தையும்  மதிக்க  வேண்டும்”, என்று  அது  கூறிற்று.

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)மீது  போலீஸ்  மேற்கொண்ட  நடவடிக்கை  பற்றிக்  கருத்துரைத்தபோது  அது  இவ்வாறு  கூறியது.

“போலீஸ்  மேற்கொண்ட நடவடிக்கைகள் நீதியைத்  திசைதிருப்பும்  நோக்கில்  விசாரணைகளுக்கு  இடர்  செய்வதுபோலவும்  இடையூறு  செய்வதுபோலவும் தடைபோடுவதுபோலவும்  உள்ளன”,  என்று  அது  குறிப்பிட்டது.

1எம்டிபி  மீது  விசாரணை  நடத்த  அமைக்கப்பட்ட  சிறப்புப் பணிக்குழுவில்  எம்ஏசிசி-யும் இடம்பெற்றிருப்பதால்  அதைவிட்டு  போலீஸ்  விலகியிருக்க  வேண்டும்  என  சுஹாகாம்  கேட்டுக்கொண்டது.

எம்ஏசிசி மிதான  போலீசின்  நடவடிக்கையைப்  பலரும், பிஎன்  தலைவர்கள்  உள்பட,  குறைகூறியதை  அடுத்து  தன்  நடவடிக்கை  எதிர்மறையான  தோற்றப்பாட்டை  உருவாக்கி  விட்டதை  உணர்ந்த  போலீஸ்,  ஊழல்  ஒழிப்பு  அமைப்புக்கு  எதிரான  நடவடிக்கையைத்  தள்ளிவைப்பதாக  சனிக்கிழமை  அறிவித்தது.

அந்த அறிவிப்பை  வரவேற்ற  எம்ஏசிசி  போலீசாரும்  கடமையைத்தான்  செய்கிறார்கள்  என்பதைத்  தான்  உணர்ந்திருப்பதாகக்  கூறிற்று.