ஜோகூர் சுல்தான் நஜிப்புக்குத் தடைபோட்டார் என்பதை மறுக்கிறார் உதவியாளர்

carபிரதமர்துறை  உதவியாளர் ரிஸால்  மன்சூர்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  விமானம்  ஜோகூரில்  தரையிறங்க மாநில  சுல்தான்  தடைபோட்டார்  என்று  கூறப்படுவதை  மறுத்தார்.

அதை  அவதூறு  என்று  குறிப்ப்ட்ட  ரிஸால்,  நஜிப்பின்  பெயரைக்  கெடுப்பதற்காக  அப்படி ஒரு  கதை  கட்டிவிடப்பட்டிருக்கிறது என்றார்.

பாசிர்  கூடாங்  அம்னோ  தொகுதிக்  கூட்டத்துக்கு  சிங்கப்பூர் கார் ஒன்றில்  நஜிப்  வந்திறங்கியதைக் காண்பிக்கும்  நிழல்படமொன்று  வெளியானதை  அடுத்து  ஜோகூர்  சுல்தான்  தடை  போட்டதாகக்  கூறும்  செய்தி தலையெடுத்தது.

“மலேசியப்  பிரதமர்  சிங்கப்பூர் வாகனமொன்றில்  ஜோகூருக்குச்  செல்ல  வேண்டிய  கட்டாயத்துக்கு  ஆளானார். ஜோகூர்  சுல்தானின்  உத்தரவுக்கிணங்க  அவரது  விமானம்  செனாய்  விமான  நிலையத்தில்  இறங்க  அனுமதிக்கப்படாததே  இதற்குக்  காரணமாகும்”, என்று  சமூக  வலைத்தளங்களில்  செய்தி  ஒன்று  வேகமாக  பரவி  வருகிறது.

நஜிப்  அதிகாரப்பூர்வப் பணிக்காக  சிங்கப்பூரில் இருக்கிறார்  என்றும்  அம்னோ  கூட்டத்துக்காக  சிறிது  நேரம்  அவர்  ஜோகூர்  திரும்பி  வந்தார்  என்றும்  ரிஸால்  கூறினார்.

“நஜிப்  சிங்கப்பூருக்கு  அக்குடியரசின்  அழைப்பை  ஏற்று  அதன் தேசிய  நாள்  கொண்டாட்டத்தில்  கலந்துகொள்ளச்  சென்றிருந்தார்.

“பாசிர்  கூடாங்  தொகுதி  ஆண்டுக்  கூட்டத்தைத்  தொடக்கிவைக்க  அவர் ஜோகூர்  திரும்பி வந்தபோது  அவர்  பயன்படுத்துவதற்காக  சிங்கப்பூர்  அரசாங்கம்  அவருக்கு  ஒரு  வாகனத்தைக்  கொடுத்திருந்தது.

“அதன்  பின்னர்  அவர்  சிங்கப்பூரில்  அதிகாரப்பூர்வ  நிகழ்வில்  கலந்துகொள்வதற்காக  திரும்பிச் சென்றார்”, என ரிஸால்  முகநூலில்  கூறியிருந்தார்.

இவ்விவகாரத்தை  ஜோகூர்  மந்திரி  புசாரின்  உதவியாளர்  அஸ்ரி  கல்பியும்  மறுத்தார். இது கூட்டரசு  அரசாங்கம்,  மாநில  அரசாங்கம்,  ஜோகூர்  அரண்மனை  ஆகியவற்றுக்கிடையிலான உறவுகளைச்  சீர்குலைக்கும்  முயற்சி  என்றாரவர்.