எம்டியுசி: முதலீடு செய்ய வேண்டியது மலேசியர்கள்மீது, வங்காளதேசிகள் மீது அல்ல

gopalஅரசாங்கம்,  வங்காள  தேசத்திலிருந்து  1.5 மில்லியன்  தொழிலாளர்களை  அழைத்து  வரவும்  அவர்களுக்குப்  பயிற்சியளிக்கவும்  செலவிடும்  பணத்தை  மலேசியர்கள்மீது  முதலீடு  செய்ய  வேண்டும்  என  மலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

“உள்ளூர்  மக்களுக்குப்  போதுமான  பயிற்சியும்  நல்ல  சம்பளமும் கொடுத்து  3டி – ஆபத்தான, கடுமையான,  அழுக்குமிகுந்த-  வேலைத்  துறையில் சேர்த்துக்கொள்வது  நல்லது   என  எம்டியுசி  நினைக்கிறது”, என  அதன்  தலைமைச்  செயலாளர் என். கோபாலகிருஷ்ணன் இன்று  கூறினார்.

இப்போதைக்கு  உள்ளூர்வாசிகள்  3டி  வேலைகளில்  ஆர்வம்  காட்டாதிருக்கலாம்.  நல்ல  சம்பளம்  கொடுத்தால்  அவர்களின்  மனம்  மாறும்  என  கோபால்  சொன்னார்.

நல்ல  சம்பளம்  கிடைப்பதால்  மலேசியர்கள்  வேலைக்காக  சிங்கப்பூர்  சென்று  வருவதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர், கடந்த  ஆண்டு  சுத்திகரிப்புத்  தொழிலாளர்களுக்கான  அடிப்படைச்  சம்பளத்தை  எஸ்$1,000  என  நிர்ணயித்தது. நடப்பு  மாற்று  விகிதப்படி  அது ரிம2,800-க்கு  நிகராகும்.

மலேசியாவில்  அடிப்படைச்  சம்பளம் தீவகற்பத்தில்  ரிம900, கிழக்கு  மலேசியாவில் ரிம800.

நல்ல  சம்பளம்  கொடுப்பது  ஒருபுறமிருக்க,  வெளிநாட்டுத்  தொழிலாளர்களை  மேன்மேலும்  இறக்குமதி  செய்வதற்குமுன் ஏற்கனவே  குவிந்துள்ள  சட்டவிரோத  தொழிலாளர்  பிரச்னைக்கு  அரசாங்கம்  தீர்வு  காண  வேண்டும்  எனவும்  எம்டியுசி  விரும்புகிறது.

“நாடு  அந்நிய  தொழிலாளர்களை  நம்பியிருக்கக்  கூடாது. அது  உள்ளூர்  பொருளாதாரத்துக்கு  நல்லதல்ல. அது  மக்களிடமும்  எதிர்மறையான  தாக்கத்தை  ஏற்படுத்தும்”, என  கோபால்  குறிப்பிட்டார்.