வெளிநாட்டிலிருந்து ரிம2.6 பில்லியன் நிதி பெற்றதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றவியல் சட்டம் பிரிவு 124-இன்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என டிஏபி பிரச்சாரப் பகுதிச் செயலாளர் டோனி புவா கூறினார்.
அதை நாடாளுமன்ற மக்களாட்சிமுறைக்குக் கெடுதல் செய்யும் செயலாகக் கருதலாம் என்றாரவர்.
“ஜனநாயகத்துக்குக் கெடுதல் செய்யும் செயலில் ஈடுபட்டதற்காக விசாரணை செய்யப்பட வேண்டியவர் நஜிப்தான். ஏன்? ஏனென்றால், அவரின் சுற்றுலா அமைச்சரே (நஸ்ரி அப்துல் அசீஸ்) ரிம2.6 பில்லியன் ஒரு சகோதர நாட்டிலிருந்து, பொதுத் தேர்தலில் குறிப்பிட்டதொரு கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மத்திய கிழக்கைச் சேர்ந்த சகோதர நாட்டிலிருந்து கிடைக்கப்பெற்றதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
“வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு 2013 மே தேர்தல்களில் வெற்றிபெற்ற அரசியல் கட்சிகள் நம் நாட்டில் உள்ளன. அப்படியென்றால் நஜிப் வெளிநாடு ஒன்றின் கையாளாக செயல்பட்டார் என்றாகிறது, இல்லையா?”. நேற்றிரவு, பெட்டாலிங் ஜெயாவில், நிதிதிரட்டும் விருந்து ஒன்றில் பெட்டாலிங் உத்தாரா எம்பி ஆன புவா இவ்வாறு பேசினார்.