பேங்க் நெகாரா 1எம்டிபிமீதான விசாரணையை முடித்துக் கொண்டிருக்கிறது

wrapஅரசுக்குச்  சொந்தமான  1எம்டிபி  மீது  பேங்க்  நெகாரா  நடத்திய  விசாரணை  பூர்த்தி  அடைந்து விட்டதாக  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்தார்  அசீஸ்  அறிவித்துள்ளார்.

விசாரணை  ஆவணங்கள்  இவ்வாரம்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலியிடம்  ஓப்படைக்கப்படும்  என்றாரவர்.

ஸெட்டி பல  வாரங்களுக்குப்  பிறகு   இப்போதுதான் வெளியில்  தோன்றியிருக்கிறார். அவரும்  1எம்டிபி  விசாரணையில்  ஈடுபட்ட  மற்ற  அமலாக்க  நிறுவனங்களின்  தலைவர்களும்  விசாரிக்கப்படுவதாகக்  கூறப்பட்டதை  அடுத்து  பல வாரங்கள் அவர் வெளியில்  தலைகாட்டாதிருந்தார்.

அந்த  விசாரணை,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்த  கணக்கில் மாற்றிவிடப்பட்ட  ரிம2.6 பில்லியனையும்  உள்ளடக்கியது  என்பதால்  சர்ச்சைக்குரியதாக  விளங்கியது.

அதன்  பிறகு  அப்துல்  கனி  பட்டேல்  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) பதவியிலிருந்து  மாற்றப்பட்டார்.

அவருக்குப்பின்  அப்பதவிக்கு  வந்தவர், போலீஸ், பேங்க்  நெகாரா,  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி), சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  ஆகியவை  அடங்கிய  சிறப்புப்  பணிக்குழுவைக்  கலைத்தார்.

அதனை  அடுத்து பேங்க்  நெகாராவும்  எம்ஏசிசி-யும்  தனித்தனியே  விசாரணைகளைத்  தொடர்ந்தன.