எம்டியுசி: ரிம2.6 பில்லியன் ஊழலுக்கிடையில் வேலை இழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது

mtucநாட்டை  உலுக்கும்  பல  ஊழல்களால் நம்பிக்கை இழந்த  முதலீட்டாளர்கள்  நாட்டைவிட்டோடுவதால்  வேலையில்லாதோர்  எண்ணிக்கை  பெருகி  வருவதை  எண்ணி  மலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ்  கவலை  அடைந்துள்ளது.

“மலேசிய  நிலவரங்களையும்  அவை  தொழிலாளர்கள்மீது  ஏற்படுத்தும்  தாக்கத்தையும்  கண்டு  எம்டியுசி  ஆழ்ந்த  கவலை  கொள்கிறது,”, என  அதன்  தலைமைச்  செயலாளர்  என். கோபாலகிருஷ்ணன்  கூறினார்.

கைச்சுத்தமான,  ஊழலற்ற  அரசாங்கமும் செம்மையாக  செயல்படும்  சட்ட  அமைப்புகளும் முறையான  அமலாக்கமும் இருப்பதைத்தான் தொழில்கள்  விரும்புகின்றன.

அது  இல்லாத  நிலையில் பல  நிறுவனங்கள்  மலேசியாவிலிருந்து  வெளியேறிவிட்டன  அல்லது  வெளியேறத்  திட்டமிடுகின்றன. இதன்  விளைவாக  ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள்  வேலை  இழக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது  என்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

“JVCKenwood Malaysia Sdn Bhd, Ansell Malaysia Sdn Bhd, Fairchild Semiconductor International Inc  போன்ற  நிறுவனங்கள் மூடப்பட்டு  விட்டதாக  அல்லது  மூடப்படும்  என்று  செய்திகள்  வந்து  கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள்  வேலை இழந்து  நிற்பார்கள் ”, எனக்  கோபாலகிருஷ்ணன்  கூறினார்.

இவர்கள்  தவிர்த்து,  சிஐஎம்பி  குழுமத்தின்  பணியாளர்  குறைப்புத்  திட்டத்தின்  காரணமாக எம்டியுசி  உறுப்பினர்களான 1,891 பேர்  ஆகஸ்ட் 31-இல்  வேலை  இழப்பர். நிதிப்  பிரச்னையை  எதிர்நோக்கும்  மலேசியன்  ஏர்லைன்ஸ்  6,000 பணியாளர்களைப்  பணிநீக்கம்  செய்யவுள்ளது.

“இவர்கள்  அன்றி  மலேசியாவில் இன்னும் பலர்  வேலை  இழந்திருப்பதாக  எம்டியுசி  நம்புகிறது. அன்மைய  எதிர்காலத்தில்  மேலும்  பலர்  வேலை  இழப்பர்”, என்றாரவர்.

வேலை  இழந்த   தொழிலாளர்களுக்கு  அவசர  நிதி உதவி  போன்ற  திட்டங்களை  உருவாக்கித்  தொழிலாளர்களின்  இழப்பைக்  குறைக்க  வேண்டும்  எனக்  கோபாலகிருஷ்ணன்  வலியுறுத்தினார். அதே  வேளை  குறைந்த  பட்ச  சம்பளத்தையும்  வாழ்க்கைச் செலவுப்  படியையும்  அதிகரிக்க  வேண்டும்.

“இப்படிப்பட்ட  சிரமமான  காலங்களில்  தொழிலாளர்களுக்கு  உதவியாக சட்டப்பூர்வ  பாதுகாப்பும்  உரிமைகளும்  தேவை”, என்றாரவர்.

ஆனால், அதைவிடவும்  முக்கியமாக  அரசாங்கத்தின்மீது  மக்களின்  நம்பிக்கை  நிலைநிறுத்தப்பட  வேண்டும்  என  கோபாலகிருஷ்ணன்  கூறினார்.