நஜிப்பை வெளியேற்ற மகாதிர், ரஸாலி கூட்டா?

 

MandKuliஇவ்வார தொடக்கத்தில் மகாதிர் முகமட்டும் தெங்கு ரஸாலி ஹம்ஸாவும் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பு பிரதமர் நஜிப்பை வெளியேற்றுவது பற்றியதாகும் என்ற ஊகம் வலுவடைந்து வருகிறது.

முன்னாள் பிரதமர் மகாதிருக்கு நெருங்கிய வட்டாரம் இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்ததை உறுதிப்படுத்தியது. ஆனால், வேறு எந்த விபரமும் கிடைக்கவில்லை.

நஜிப்பை அகற்றுவதற்கு ஓர் ஒற்றுமை அரசை அமைக்கும் நோக்கத்தை இச்சந்திப்பு கொண்டிருந்தது என்று ஏசியா சென்டினல் கூறுகிறது.

“மலேசியாவில் தலைமைத்துவ நெருக்கடி இருக்கிறது. அதனை ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே தீர்க்க முடியும். அது கூ லீ (தெங்கு ரசாலி). ஒரே தீர்வு அவர்தான்.”

இதனை எப்படி செயல்படுத்துவது என்பதுதான் கேள்வி என்று ரசாலியின் அடையாளம் காணப்படாத நண்பர் ஒருவர் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.

ஏசியா சென்டினலின் கூற்றுப்படி, அவ்விருவருக்கும் பெரும் தடையாக இருப்பது நாடாளுமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதுதான்.

நாடாளுமன்றத்தின் 222 உறுப்பினர்களில் எதிரணியினரின் 88 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று அவ்விருவரும் நம்புகின்றனர். இருப்பினும். பாஸ் கட்சியின் வாக்குகள் கேள்விக்குரியாக இருக்கும்.

ஆனால், பாரிசானிடம் 132 எம்பிக்கள் இருக்கின்றனர். அவர்களில் 88 பேர் அம்னோவின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள்.

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் ஒரு பிரச்சனையாகும். அவர் ஜனநாயக முடையில் இயங்குபவர் அல்லர். நடுநிலைமையில் செயல்படுவதற்கு மாறாக ஆளும் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத்தை அவர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட, ஆனால் பதவியில் இருக்கும் பிரதமருக்கு எதிராக ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அவர் அனுமதிக்க மாட்டார் என்று மகாதிர்-ரசாலிக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது. கருத்து தெரிவித்தவர் ஓர் அரசமைப்புச் சட்ட வழக்குரைஞர் என்று அடையாளம் காணப்பட்டது.

தமது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள போராடி வரும் நஜிப் அடுத்து ஒரு மகாதிர்-தெங்கு ரசாலி எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும்.