1எம்டிபி பற்றித்தான் நிறைய விசாரிக்கப்பட்டு விட்டதே: புவாவுக்கு அருளின் பதில்

arulநாட்டில்  மிகுந்த  விசாரணைக்கு  இலக்கான  நிறுவனமாக விளங்குகிறது  1எம்டிபி. அந்த  விசாரணைகளிலிருந்து  நிறைய  தகவல்களைப்  பெறலாமே  என்கிறார்  1எம்டிபி-இன்  தலைமை  செயல்  அதிகாரி  அருள்.

நிறைய  கடன்களைக்  கொண்டிருக்கும்  அந்நிறுவனம்மீது  பொது  விவாதம்  செய்ய  அழைப்பு  விடுத்த  பெட்டாலிங் ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா-வுக்கு  அவர் இவ்வாறு  பதிலளித்தார்.

“நாட்டில்  நிறைய  விசாரணைக்கு  இலக்கான  நிறுவனம்  1எம்டிபிதான்  என்பதை புவா  அறிவார்  என்பதில்  ஐயமில்லை.

“நாங்கள், சட்டப்பூர்வ  விசாரணை  அதிகாரிகளான  தலைமைக்  கணக்காய்வாளர், சட்டத்துறைத்  தலைவர், பேங்க்  நெகாரா  மலேசியா, போலீஸ், மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி), பொதுக்  கணக்குக்  குழு(பிஏசி)  போன்றோரிடம்  சம்பந்தப்பட்ட  தகவல்களைப் பகிர்ந்து  கொண்டிருக்கிறோம்  தொடர்ந்து  பகிர்ந்து கொண்டும்  வருகிறோம்.

“சுயேச்சையாகவும்  துல்லியமாகவும், நிபுணத்துவ  முறையிலும்  நடைபெறும்  இந்த  விசாரணைகளே 1எம்டிபி  பற்றிய  உண்மைகளைக்  கண்டறிய பொருத்தமான  அரங்கமாகும்”, என  அருள்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.