கூ லி: அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் தேவைப்படும்

Ku Liarmyneeded“அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம்” ஒன்று இருப்பதாகக் கூறப்படுவதை அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரஸாலி ஹம்ஷா நிராகரிக்கிறார்.

“அதனைச் செய்வதற்கு இராணுவம் தேவைப்படும். சாதாரணமான மக்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது”, என்று தெங்கு கோலாலம்பூரில் அவரது இல்லத்தில் இன்று நடந்த ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று முன்னேரத்தில், நாட்டின் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி ஓர் அம்னோ தலைவர் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறிக்கொண்டார்.

அவர்கள் எதிர்க்கட்சி மற்றும் சில அம்னோ உறுப்பினர்களின் உதவியோடு நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக அறிவித்து அரசாங்கத்தை பின்வாசல் வழியாக கவிழ்க்கும் திட்டத்தை வைத்துள்ளனர் என்று துணைப் பிரதமர் கூறினார்.

அரசாங்கத்தைக் கவிழ்ப்பது நடக்கக்கூடியதல்ல என்றாலும், மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நஜிப்பிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றாரவர்.

“அவ்வாறு செய்யலாம். விதிமுறைகள் அதை அனுமதிக்கிறது. எந்த ஒரு தரப்பினரும் செய்யக்கூடியது அது ஒன்றே”, என்று அவர் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.

“இது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானதல்ல. துயரார்ந்த எவரும் இம்முன்மொழிதலை (நாடாளுமன்றத்திற்கு) கொண்டு வரலாம். தேவைப்பட்ட எண்ணிக்கை (வாக்குகள்) கிடைத்து விட்டால், வெற்றி கிடைக்கும். இல்லை என்றால், எதுவும் (நடக்காது)”, என்றாரவர்.

அவர் இச்சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, தமக்கு எதுவும் தெரியாது என்று தெங்கு ரஸாலி பதில் அளித்தார்.