“குகைகள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற தகுதி பெறவில்லை”

 

Batu Caves-Unesco1பத்துமலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற மலேசியா மனு தாக்கல் செய்யாது. மாறாக, அந்தச் சுற்றுலா   சின்னமான அவ்விடத்தை ஒரு தேசிய பாரம்பரியத் தளமாக அறிவிக்க சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சு உறுதியளிக்கிறது என்று தஸ்டார்ஓன்லைன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பத்துமலை யுனெஸ்கோ அந்தஸ்துக்கு தகுதி பெறாததால் அதற்காக மனு செய்வது நேரத்தை வீணாக்குவதாகும் என்று சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் முகம்மட் நஸ்ரி அசிஸ் கூறினார்.

“அது நம்மைப் பொறுத்ததல்ல. நிபந்தனைகளை யுனெஸ்கோ நிர்ணயிக்கிறது. நாம் அதற்கு இணங்க வேண்டும்.

“நாம் இணங்கவில்லை என்றால், நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அதை ஒரு தேசிய பாரம்பாரிய தளமாக அறிவிப்பதாகும்”, என்று நஸ்ரி தெரிவித்தார்.

யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கு அது நிர்ணயித்துள்ள 10 திட்டவட்டமான கூறுகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது பெற்றிருக்க வேண்டும்.

“பத்துமலையை ஒரு தேசிய பாரம்பரியத் தளமாக அறிவிப்பது நமது குறியிலக்கிற்கு உட்பட்டது; ஆனால் யுனெஸ்கோ தகுதி அல்ல”, என்றாரவர்.

யுனெஸ்கோ தகுதி பெற மனு செய்யப்படுமா என்று வலியுறுத்தி கேட்டதற்கு நாம் தகுதி பெறாத போது மனு செய்வதில் பயனில்லை ஏனென்றால் அது நேரத்தை வீணாக்குவதாகும் என்று நஸ்ரி அவரது கருத்தைத் தெரிவித்தார்.

தம்மைப் பொறுத்தவரையில், தேசிய பாரம்பரிய தகுதிக்கு பத்துமலை சுலபமாகத் தகுதி பெறும். 400 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்த அக்குகைகளை பட்டியலில் சேர்ப்பதால் அவற்றை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று நஸ்ரி மேலும் கூறினார்.

பழமை வாயந்த பாரம்பரிய கட்டடங்களை தேசிய பாரம்பரிய சொத்தாக அறிவித்தால் அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் என்ற தவறான கருத்து நிலவுகிறது என்று கூறிய நஸ்ரி, அது உண்மையல்ல என்றார்.

“பத்துமலையைப் பொறுத்த வரையில், அதை பட்டியலிடுவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், அதற்கான மனுவை சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றம், பொதுமக்கள் அல்லது பத்துமலை கோயில் குழுவும் கூட கண்டிப்பாக செய்ய வேண்டும்.

“மனு செய்யுங்கள், நான் ஆதரவு அளிப்பேன்”, என்று நஸ்ரி தெரிவித்தார்.

 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்திருக்கலாம்

 

Batu Caves-Unesco2சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமான பத்துமலை யுனெஸ்கோ அங்கீகாரத்திற்குத் தகுதி பெறாது ஏனென்றால் ஊராட்சிமன்றம் அந்த தளத்தை நிருவகிக்கும் மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் அவ்விடத்தைப் பாதுகாத்தல் மற்றும் பேணி வளர்ப்பதற்கான நடைமுறை தேவைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டியதை உறுதி செய்யத் தவறிவிட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பத்துமலை யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெறுவதற்கான மனு செய்யத் தகுதி பெற்றிருக்கும் என்று மலேசிய அனைத்துலக நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான மன்றத்தின் (ஐசிஒஎம்ஒஎஸ்) தலைவர் ஹஜிடார் அப்துல் மஜிட் கூறுகிறார்.

இதனால்தான் தேசிய பாரம்பரிய இலாகா (ஜேடபுள்யுஎன்) பத்துமலைக்கு யுனெஸ்கோ தகுதி கோரும் மனுவை செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பத்துமலை யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெறுவதற்கான பரிசீலனைக்கு தகுதி பெற்றிருக்கும் என்று கூறிய ஹஜிடார், “என்னை 50 ஆண்டுகளுக்கு பின்நோக்கி எடுத்துச் சென்றீர்களென்றால், நான் இந்த முக்கியமான இடம் யுனெஸ்கோ பாரம்பரிய தளப் பட்டியலில் இடம் பெறுவதற்காக போராடியிருப்பேன்”, என்றார்.

இன்று, அங்கு காணப்படும் வணிக வளாகங்கள், கடைகள் போன்ற மேம்பாடுகள் அத்தளத்தின் பொருள்கள் சார்ந்த இடப்பரப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குகைக் கோயிலுக்கு இட்டுச் செல்லும் சிறப்பு வாய்ந்த படிக்கட்டுகள் போன்ற வரலாற்றுக் கட்டடங்கள் அந்த முழு இடத்திற்கும் பொருத்தமானவையாக இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அப்பெரும் படிக்கட்டுகளின் எல்லையிலிருந்து 200 மீட்டர் தூரம் அக்குகைகள் மற்றும் அங்குள்ள இயற்கை சூழ்நிலைக்கு இசைவானதாக இருந்திருக்க வேண்டும் என்று அவர் விளக்கமளித்தார்.

“இன்று, அது மிகுதியான வாணிகத்தையும், மிகுந்த அலங்கோலத்தையும் கொண்டிருக்கிறது”, என்று ஹஜிடார் தெரிவித்தார்.

 

நஜிப்பின் நம்பிக்கை

 

2013 ஆம் ஆண்டில், பத்துமலையில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் ரசாக் பத்துமலை மலேசியாவின் ஒரு படிவம் என்பதால் அதற்கு யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வமான அங்கீகரத்தைப் பெறும் நோக்கம் இருப்பதாக அறிவித்தார்.