ஹாடி பிரதமரிடம் பிரியமாக இருக்கிறார் அதனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெறாது

kitபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராகக்  கொண்டுவரப்படும்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  வெற்றிபெறும்  என்ற  நம்பிக்கை  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்குக்கு  இல்லை. எதிரணியிலேயே  அதற்கு  எதிர்ப்பு  இருக்கும், குறிப்பாக  பாஸ்  அதை  ஆதரிக்காது  என்றவர்  நினைக்கிறார்.

அம்னோ  தலைவர்  ஒருவர் எதிரணி  மற்றும்  ஆளும்  கட்சி  உறுப்பினர்களின்  ஆதரவுடன்  அரசாங்கத்தைக்  கவிழ்க்கப்  பார்க்கிறார்  என  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறியிருப்பது  குறித்துக்  கருத்துரைத்தபோது  கேளாங்  பாத்தா  எம்பியான  லிம்  இவ்வாறு  கூறினார்.

நஜிப்பை  வெளியேற்ற எல்லா  எதிரணி  எம்பிகளின்  ஆதரவையும்  பெறுவது சாத்தியமல்ல  என  லிம்  குறிப்பிட்டார்.

“பாஸ் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கின்  அண்மைய  அறிக்கைகள்,, அவரின்கீழ்  செயல்படும்  புதிய  பாஸ்
தலைமைத்துவம்  நஜிப்  பிரதமராக இருப்பதை ஆதரிப்பதைக்  காண்பிக்கிறது.

“நாடாளுமன்றத்தில்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவரப்படும்  வேளையில், பாஸின்  21 எம்பிகளும்  பிகேஆருக்கும்  டிஏபி-க்கும்  ஆதரவாக  இருப்பார்கள்  என்பதற்கில்லை. அவர்களில்  பாதிப்  பேராவது  நஜிப்பை  ஆதரிக்கும்  ஹாடியின்  விசுவாசிகளாக  இருப்பார்கள்.

“இதனால்  அத்தீர்மானத்தை  ஆதரிக்கும்  எதிரணி  எம்பிகளின் எண்ணிக்கை 77 ஆக  சுருங்கி  விடும். அந்நிலையில்  மேலும்  பல  அம்னோ/ பிஎன்  எம்பிகள்  நம்  பக்கம்  வந்து  சேர்ந்தால்தான்  ஒரு  சாதாரண  பெரும்பான்மையைப்  பெற  முடியும்.

“இது  நடக்கக்  கூடியதா?  சந்தேகம்தான்”, என்றார்  லிம்.