பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்காக சட்டத்தில் அவசர திருத்தம் செய்யப்பட வேண்டும் என்கிறது மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்).
பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவதற்காக விதிமுறைகளை வகுக்கும்போதும் செயல்படுத்தும்போதும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என சுஹாகாம் தலைவர் ஹஸ்மி அகாம் கேட்டுக்கொண்டார்.
“குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் அவற்றின் விதிமுறைகளைச் செயல்படுத்தும்போது அது, தகவல் அறியும் உரிமை, தேசிய, அனைத்துலக விவகாரங்களை விவாதிக்கும் உரிமை, ஜனநாயக உணர்வுடன் எந்தவொரு விவகாரத்தின்மீதும் கருத்துரைக்கும் சுதந்திரம் போன்ற மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறாதிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்..
பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லியை பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றிப் பேசுவதற்காக அழைத்த அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றப்பட்டதையும் யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா ஒரு கண்டனக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதையும் அடுத்து சுஹாகாம் இவ்வாறு கூறியுள்ளது.