மூத்தோர் ஆணையம் அமைத்து அரசாங்கக் கவிழ்ப்புப் பற்றி விசாரிக்க வேண்டும்

1-kit-siang1பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேலையும்  துணைப்  பிரதமர் முகைதின்  யாசினையும்  பதவிநீக்கம்  செய்தது  பல  ஊகங்களுக்கு  இடமளித்தது.

அது, பிரதமரைக்  கவிழ்க்கும்  திட்டத்தை  முறியடிக்கும்  நடவடிக்கை  எனச்  சிலர்  கூறிகொண்டிருக்கிறார்கள். இன்னும்  பலர்  பலவிதமாக  பேசிக்  கொள்கிறார்கள்.

இதற்கு  முடிவு காண  மூத்தோர்  ஆணையம்  ஒன்று  அமைக்கப்பட  வேண்டும்  என்று  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  அறைகூவல்  விடுத்துள்ளார்.

அவர்கள்,  பிரதமர்  நஜிப்பைக்  கவிழ்க்க  உண்மையிலேயே  திட்டமிடப்பட்டதா  என்பதையும் அப்துல்  கனி,  முகைதின்  யாசின்  ஆகியோர்  பதவியிலிருந்து  அகற்றப்பட்டதையும்  அரசாங்க  உயர்  அதிகாரிகள்  இருவர் கைது  செய்யப்பட்டதையும்  விசாரிக்க  வேண்டும்  என்றார்.

அத்துடன் இந்நடவடிக்கைக்கும்  1எம்டிபி, ரிம2.6 பில்லியன்  நஜிப்பின்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டது  ஆகியவற்றுக்கும்  தொடர்புண்டா  என்பதும்  கண்டறியப்பட  வேண்டும்.

அந்த  ஆணையத்தில்  இடம்பெறத்  தகுதியானவர்கள்  என  நீண்ட  பட்டியல்  ஒன்றையும் லிம்  கொடுத்திருக்கிறார்.

முன்னாள்  பிரதமர்  அப்துல்லா  அஹமட்  படாவி,  முன்னாள்  துணைப்  பிரதமர்  மூசா  ஹித்தாம்,  முன்னாள்  தலைமை  நீதிபதி  ட்ஸைடின்  அப்துல்லா,  முன்னாள்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  ஹனிப்  ஒமார்,  முன்னாள்  சட்டத்துறைத்  தலைவர்  அபு  தாபிப்  ஒத்மான்,  ரபிடா அசிஸ்,  ராமோன்  நவரத்தினம், சைமன்  சிபவுன்,  டேனியல்  தேஜெம்,  அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  இயோ  யான்  போ  போன்றோர்  அப்பட்டியலில்  இடம்பெற்றுள்ளனர்.

லிம்,  முன்பு  1எம்டிபிமீது  விசாரணை  நடத்த  அரச  ஆணையம்  அமைக்க  வேண்டுகோள் விடுத்தபோது  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்தான்  அதற்குத்  தலைவராக  இருக்க  வேண்டும்  என்று  பரிந்துரைத்தார்.  ஆனால்,  இப்போது  அவர்  மகாதிரின்  பெயரை  விட்டு  விட்டார்.

“தகவல்  யுகத்தில், ஜனநாயக  நாடான  மலேசியாவில்  வாழும்  மலேசியர்கள், ‘புத்ரா  ஜெயாவில்  2015 ஜூலை  மாதத்தின்  கடைசி  நாள்கள்’பற்றிய  உண்மையை,  முழு  உண்மையைத்  தெரிந்துகொள்ள  உரிமை  பெற்றவர்கள்”,  என  லிம்  செய்தியாளர்களிடம்  கூறினார்.