எம்பிகளின் ஆதரவை வாங்கப் பார்க்கிறாரா, நஜிப்?

kit siபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  பிஎன்  நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்காக  ஒதுக்கப்படும்  நிதி  அதிகரிக்கப்படும்  என்று  அறிவித்திருப்பதை  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  சாடியுள்ளார். இது பணத்தைக்  கொடுத்து  பிஎன்  நாடாளுமன்ற  உறுப்பினர்களின்  ஆதரவை “விலைக்கு வாங்கும்”  முயற்சி  என்று  அவர்  கடிந்து  கொண்டார்.

“அடுத்த  ஆண்டில்  அம்னோ/பிஎன்  எம்பிகளுக்குக்  கூடுதல்  நிதி  ஒதுக்கப்படும்  என்று  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  நஜிப்  அறிவித்தார். அதாவது  இப்போது  ஒவ்வொரு  அம்னோ/பிஎன்  நாடாளுமன்றத் தொகுதிக்கும்  ஒதுக்கப்படும் ரிம5 மில்லியன்  அதிகரிக்கப்படவுள்ளது”, என்றாரவர்.

ஆனால், நாடாளுமன்றத்  தொகுதிகளுக்கு  ஒதுக்கப்படும்  பணம்  எதிரணி  எம்பிகளுக்குக்  கொடுக்கப்படுவதில்லை. பார்க்கப்போனால்  இது  எல்லாமே  வரி   கொடுப்பவர்களின்  பணம். ஆனால்,  அது  அம்னோ/பிஎன்  அமைச்சர்கள்  மற்றும்  எம்பிகளுக்குச்  சொந்தமான  பணம்போல  நடந்து  கொள்கிறார்கள்  என  கேளாங்  பாத்தா  எம்பி-யான  கிட்  சியாங்  கூறினார்.

நதிமூலம், ரிஷிமூலம்  என்பதுபோல்  இது  ஊழல்மூலம்  என்றாரவர்.

“இங்குதான்  ஊழல்  தொடங்குகிறது. எது சரி  எது தவறு  என்பது  கண்ணுக்குப்  படாமல்  போய்விடுகிறது”, என்றார்  லிம்.