அம்னோவைச் “சீண்டிவிடும்” வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி, அம்னோ பற்றித் தாம் சொன்ன அத்தனையும் உண்மையே என்று எதிர்வழக்காடுகிறார்.
“அமைதியை உடைக்கும் நோக்கில் வேண்டுமென்றே பழித்துரைத்தார்” என ரபிஸிமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஈராண்டுச் சிறை அல்லது ரிம4,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
சிலாங்கூர் அம்னோதான் கடந்த ஆண்டு கிள்ளான் தேவாலயத்துக்குமுன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குக் காரணம் என்றும் பினாங்கில் ஒரு தேவாலயத்தின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கும் அம்னோ சிலாங்கூருக்கும் தொடர்பு உண்டு என்றும் 2014 பிப்ரவரியில் கூறியதற்காக ரபிஸி இப்போது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
ரபிஸி, தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது அம்னோதான் என்று தாம் சொன்னது உண்மையிலும் உண்மை என்றார்.
“நான் சிலாங்கூர் பற்றிச் சொன்ன அத்தனையும் உண்மைதான். ஊடகங்களிலும் அம்னோவின் அறிக்கைகளிலும் அவை தெரிவிக்கப்பட்டிருந்தன”, என பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரபிஸி கூறினார்.