‘எஸ்ஆர்சிமீது விசாரணை தொடர்வது ஏன் என்று ஜாஹிட் விளக்க வேண்டும்’

srcபுதிய  துணைப்  பிரதமர்  ஜாஹிட்  ஹமிடி, பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்ட  யுஎஸ்$700மில்லியனில்  ஒரு  காசுகூட  ஓய்வூதிய  நிதியிலிருந்து (KWAP)  வந்ததல்ல  எனக் கூறியுள்ளார்.

அந்த   யுஎஸ்$700 மில்லியனும்  மத்திய  கிழக்குக்  கொடையாளர்  ஒருவரிடமிருந்து  வந்த   பணம்  என்றும்  பல  நிறுவங்களின்  மூலமாக  அது  நஜிப்பின்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டது  என்றாரவர். “நான்  ஆவணங்களைப்  பார்த்தேன்.  KWAP பணத்தை  அம்னோ  பயன்படுத்திக் கொண்டதில்லை, நஜிப்பின்  கணக்கிலும்  போடப்பட்டதில்லை”, என  ஜாஹிட்  நேற்று  ஸ்ரீகாடிங்  அம்னோ தொகுதிக்  கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது  கூறினார்.

KWAP-இடமிருந்து  ரிம4 பில்லியன்  கடன்  வாங்கிய எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திடமிருந்து  நஜிப்பின்  கணக்குக்குப்  பணம்  மாற்றிவிடப்படவில்லை  என்று  ஜாஹிட்  இவ்வளவு  உறுதியாகக்  கூறும்போது  நஜிப்  அப்துல் ரசாக்  வால் ஸ்திரிட்  ஜர்னல்  மீதும்  சரவாக் ரிப்போர்ட்  மீதும்  அவதூறு வழக்கு  தொடுத்திருக்கலாமே  ஏன்  அப்படிச்  செய்யவில்லை  என்று  கேட்கிறார்  டிஏபி-இன்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா.

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையமும் (எம்ஏசிசி) பிரதமர்  கணக்கில்  வரவு  வைக்கப்பட்ட  யுஎஸ்$681 மில்லியன்  மட்டுமே  “வெளிநாட்டு  நன்கொடை”  என்று  குறிப்பிட்டுள்ளது. அத்துடன்  எஸ்ஆர்சி-இலிருந்து  வந்த  பணம்மீது  புலனாய்வுகள்  தொடர்வதாகவும்  அது  தெரிவித்துள்ளது.

மேலும், இப்பணம்  2014  முடிவிலும்  இவ்வாண்டு  தொடக்கத்திலும்தான்  வரவு  வைக்கப்பட்டிருக்கிறது.  பிரதமர், இதைத்  தேர்தலுக்காகக்  கொடுக்கப்பட்ட பணம்  என்று  சொல்ல  முடியாதே  என்றாரவர்.

அதை  “அரசியல்  நன்கொடை”  என்றால்  அதுவும்  ஊழல்,  நம்பிக்கை  மோசடி  என்றுதான்  ஆகும்.  ஏனென்றால்  அப்பணம்  அரசாங்க  நிறுவனங்களிலிருந்து  வந்துள்ளது  என்று  புவா  கூறினார்.