எஸ்பி அதிகாரி: 1எம்டிபிமீது உண்மையைச் சொல்ல விரும்பினேன், மாற்றப்பட்டேன்

badorபோலீஸ்  சிறப்புப் பிரிவு (எஸ்பி) துணை  இயக்குனர்  அப்துல்  ஹமிட்  படோர்,  1எம்டிபி  மீதான  விசாரணை  முழு வெளிப்படைத்தன்மையுடன்  நடைபெற  வேண்டும்  என  வலியுறுத்தி  வந்ததால்தான்  தாம்  இடமாற்றம்  செய்யப்பட்டதாக   நம்புகிறார்.

சில  தரப்பினரின்  “திட்டங்களை”  நிறைவேற்ற  விரும்பவில்லை  அதனால்தான்  தம்மைத்  திடீரென்று  பிரதமர்துறைக்கு  மாற்றி  விட்டார்கள்  என  37  ஆண்டுகளாக  எஸ்பி-இல்  பணியாற்றிவந்த  அவர்  கூறினார்.

“உள்ளதை  மாற்றி  வேறுவிதமாகக்  கூற  மாட்டோம். உண்மை  என்னவோ  அதைத்தான்  சொல்வோம். அது  அவர்களுக்குப்  பிடிக்கவில்லை  போலும். அவர்களுக்கு  இதமளிக்கும்  ஒன்றைக்  கேட்க  அவர்கள் விரும்பியிருக்கலாம்”, என்றாரவர்.

பாடோரின்  இடமாற்றம்,  1எம்டிபி  விசாரணையில்  ஈடுபட்டிருந்த  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய  அதிகாரிகளுக்கு  ஏற்பட்ட  நிலையை  நினைவுபடுத்துகிறது.

எம்ஏசிசி  சிறப்பு  நடவடிக்கை  பிரிவு  இயக்குனர்   பாஹ்ரி  முகம்மட்  ஸின்னும்  வியூக  தொடர்பு இயக்குனர்  ரொஹாய்ஸாட்  யாக்கூப்பும்  இதேபோல்தான்  பிரதமர்துறைக்கு மாற்றப்பட்டார்கள்.

பலமுனைகளிலிருந்தும்  கண்டனங்கள்  தெரிவிக்கப்பட்டதை  அடுத்து  அவர்களின்  இடமாற்ற  உத்தரவு  இரத்துச்  செய்யப்பட்டது.

இன்னொரு  நிலவரத்தில்,  1எம்டிபி  விசாரணைக்கு  அமைக்கப்பட்ட  சிறப்புப்  பணிக்  குழுவில்  பணியாற்றிய  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்தைச் சேர்ந்த  அதிகாரி  ஜெசிகா  குர்மிட்  கவுரும்  பணிநீக்கம்  செய்யப்பட்டார். அவரின்  நிரந்தர  வசிப்பிடத்  தகுதியும்  பறிக்கப்பட்டது.