அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெறவுள்ள செப்டம்பர் 9ஆம் நாள் நெருங்கி வரும் வேளையில் முகைதின் யாசின் அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்படலாம் என்ற வதந்தியும் வலுத்து வருகிறது.
இதைப் பற்றி தம் வலைப்பதிவில் எழுதியுள்ள அம்னோ சமூக ஆர்வலர் ஷாபுடின் உசேன், உச்சமன்றக் கூட்டத்தில் என்ன நடக்கும் என்பது பற்றிப் பல்வகை கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் முகைதின் வெளியேற்றப்படுவதற்கான அறிகுறிகளும் தெரிவதாகக் குறிப்பிட்டார்.
“கட்சியின் மதிப்பைக் கெடுத்து விட்டார் என்பதற்காகவும் 1எம்டிபி மற்றும் ரிம2.6 பில்லியன் நன்கொடை விவகாரத்தில் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கை அம்னோ கூட்டங்களில் வெளிப்படையாகவே குறைகூறியதற்காகவும் அவர் பதவிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது”, என ஷாபுடின் கூறினார்.
துணைத் தலைவர் பதவியிலிருந்து முகைதினைத் தூக்கிவிட்டால் கட்சியில் அவரது செல்வாக்கு நீர்த்துப்போகும் என்று கருதப்படுவதாக தெரிகிறது.
ஆனால், 1எம்டிபி பற்றிக் குறைகூறி வந்துள்ள அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் சாபா அம்னோவின் துணைத் தலைவருமான ஷாபி அப்டாலின் பதவிக்கு ஆபத்து இல்லை. அவரது பதவியில் கை வைத்து சாபா ஆதரவாளர்களின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற எச்சரிக்கைதான் காரணம்.
உச்சமன்றக் கூட்டத்துக்கு முன்னதாகவே, முகைதினின் பதவிநீக்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு திரட்டும்
முயற்சி முடுக்கி விடப்பட்டிருப்பதாக ஷாபுடின் தெரிவித்தார்.
“முகைதினைப் பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை மூத்த கட்சி உறுப்பினர் ஒருவர் கொண்டு வருவார் எனக் கூறப்படுகிறது”.
உச்சமன்றக் கூட்டத்தில் முக்ரிஸ் மகாதிர், ஜம்ரி அப்துல் காடிர் ஆகியோரின் மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் பதவி பறிபோகலாம் என்றும் ஷாபுடின் கூறினார்.
முகிரிஸின் இடத்தில், புதிய அமைச்சரான மாஹ்ட்ஸிர் காலிட்டும் ஜம்ரிக்குப் பதிலாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் நியமிக்கப்படலாம்.
ஆபத்து வருவதற்கான வாய்ப்புக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். ஜோகூர் சுல்தானின் ஆதரவு அவருக்கு உண்டு என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது.