கேஎல் சிபிஓ: பெர்சே 4 சட்ட விரோதமானது

cpoவார  இறுதியில்  கூட்டரசுத்  தலைநகரில்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும்  பெர்சே 4 பேரணி  சட்டவிரோதமானது.  ஏனென்றால்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  2012 அமைதிப்பேரணிச்  சட்டத்தில்  காணப்படும்  ஒரு  நிபந்தனையை  நிறைவேற்றத்  தவறிவிட்டனர்.

அச்சட்டத்தின்  பகுதி  9-இன்படி  ஏற்பாட்டாளர்கள்  எங்கு  பேரணி  நடத்த  நினைக்கிறார்களோ அதற்கு  அந்த  இடத்தின்  உரிமையாளர்களின்  அனுமதியைப்  பெற்றிருக்க  வேண்டும்  என  கோலாலும்பூர்  போலீஸ்  தலைவர்  தாஹுடின்  முகமம்ட்  இசா  கூறினார்.

கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழகம்,  டட்டாரான்  மெர்டேகாவிலோ  அதைச்  சுற்றியுள்ள  இடங்களிலோ  பேரணி  நடத்த  அனுமதி  வழங்கத்  தயாராக  இல்லை.

“ சட்டங்கள்  இருக்கின்றன.  அவற்றை  மதிக்க  வேண்டும். (மதிக்காதவர் மீது) நாங்கள்  கடும்  நடவடிக்கை  எடுப்போம். ”, என்றவர்  இன்று  கோலாலும்பூரில்  கோலாலும்பூர்  மேயர்  முகம்மட்  அமின்  நோர்டினுடன்  சேர்ந்து  நடத்திய  செய்தியாளர் கூட்டத்தில்  கூறினார்.

பேரணி  ஏற்பாட்டாளர்கள்  சட்டத்தைப்  பின்பற்றி  நடந்து  முகம்மட்  அமின்  பரிந்துரைத்திருப்பதுபோல்  விளையாட்டரங்கம்  போன்ற  மூடப்பட்ட  இடத்தில்  பேரணி  நடத்தினால்  போலீசுக்குப்  பிரச்னை  இருக்காது  என  தாஜுடின்  கூறினார்.

இதனிடையே  முகம்மட்  அமின்,  பெர்சே4 பேரணியை  டட்டாரான்  மெர்டேகாவில்  நடத்த  டிபிகேஎல்  அனுமதி  வழங்காது  என்பதை  மீண்டும்  வலியுறுத்தினார்.

பேரணியை தித்திவங்சா  ஸ்டேடியத்தில்  நடத்தலாம்  என்றாரவர். அது  டிபிகேஎல்   கட்டுப்பாட்டில்  உள்ள  ஒரு  விளையாட்டு  அரங்கம். அல்லது  புக்கிட்  ஜாலில் தேசிய  அரங்கத்தில்  அல்லது  மெர்டேகா  ஸ்டேடியத்தில்  நடத்துவதாக  இருந்தால்கூட  அவற்றின்  உரிமையாளர்களிடம்  அனுமதிக்கு  விண்ணப்பிப்பதில் டிபிகேஎல்  உதவ  ஆயத்தமாக  இருக்கிறது  என்றாரவர்.

– Bernama