போலீஸ் படைத் தலைவர் ஏஎஸ்பி பதவிக்குக் கீழே உள்ளவர்களைத்தான் இடமாற்றம் செய்ய முடியும். அதற்குமேலே உள்ளவர்களை இடமாற்றம் செய்ய போலீஸ் ஆணையத்தின் ஒப்புதல் தேவை என்கிறார் முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மூசா ஹசான்.
போலீஸ் சிறப்புப் பிரிவு துணைத் தலைவரான போலீஸ் துணை ஆணையர் அப்துல் ஹமிட் படோரின திடீர் இடமாற்றம் பற்றிக் கருத்துரைத்தபோது மூசா அவ்வாறு கூறினார்.
ஏஎஸ்பி பதவியில் உள்ளவர்களையும் அதற்கும் மேலான பதவிகளில் உள்ளவர்களையும் இடமாற்றம் செய்ய போலீஸ் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
தாம் அறிந்தவரை அப்துல் ஹமிட் நல்லவர், கடுமையாக உழைப்பவர், நம்பிக்கைக்கு உரியவர் என மூசா கூறினார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக போலீசில் பணி புரிந்துள்ள அப்துல் ஹமிட், தாம் பிரதமர்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு “மறைமுகமான கரங்கள்” பின்னணியிலிருந்து செயல்பட்டுள்ளன என்று கூறினார். 1எம்டிபி பற்றி முழுமையான விசாரணை தேவை என்று தாம் பிடிவாதமாகக் கூறி வந்ததுதான் அதற்குக் காரணம் என்றாரவர்.
மூசா, போலீசில் வெளியார் குறுக்கீடு பற்றிக் கருத்துரைக்க விரும்பவில்லை. தாம் இப்போது போலீசில் இல்லை என்பதால் அதன் உள்நடப்புகள் பற்றித் தெரியாது என்றார்.
நேற்று, முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் ரஹிம் நூர் அப்துல் ஹமிட் இடமாற்றம் செய்யப்பட்டது “மிகவும் கவலை தருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.