நேற்று டாத்தாரான் மெர்தேக்காவில் களமிறங்கிய ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட பெர்சே 4 பேரணியினர் தலைநகர் கோலாலம்பூரை மஞ்சள் நிறமாக்கினர்.
இன்று அப்பேரணி குறித்த செய்திகளை வெளியிட்ட நாளிதழ்களின் முன்பக்க செய்தித் தலைப்புகள் பெர்சே 4 இயக்கத்தின் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தன.
சீன மற்றும் தமிழ் நாளிதழ்கள் அவற்றின் முன்பக்க செய்தி தலைப்புகளை மஞ்சள் நிறத்தில் வெளியிட்டு முதன்மை நிலையிருந்தன.
மலாய் நாளிதழ்களான மிங்குவான் மலேசியா மற்றும் பெரித்தா ஹரியான் ஆகியவையும் மஞ்சள் நிறம் கண்டன. ஆனால், அவற்றில் காணப்படும் செய்திகள் எதிர்பார்க்கப்பட்டவாறு சுத்தி விடப்பட்டிருந்தன.
பெரித்தா ஹரியான் “பெர்சே 4 நாட்டை நேசிக்கவில்லை” என்று தலைப்பிட்டிருந்தது. அம்னோவுக்கு சொந்தமான உத்துசானின் மிங்குவான் “பெர்சே 4 ஐ டிஎபி அடக்கி ஆள்கிறது” என்ற தலைப்பையிட்டு அந்தப் பேரணி சட்டவிரோதமானது என்றும் எழுதியிருந்தது.
ஆங்கில நாளிதழ்களான த ஸ்டார் மற்றும் சண்டே டைம்ஸ் பெர்சே 4 பேரணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
மகாதிரின் வருகைக்கு முக்கியத்துவம்
பெர்சே 4 பேரணிக்கு மகாதிரின் மேற்கொண்ட திடீர் வருகை இதர மொழி நாளிதழ்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்றாலும், மலாய் மொழி நாளிதழ்கள் அத புறந்தள்ளி விட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. சினார் மட்டும் மகாதிர் பெர்சே ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தது.
தினமலர் மற்றும் தினக்குரல் அவற்றின் முன்பக்கத்தில் மகாதிரின் பெர்சே 4 வருகைப் படங்களை வெளியிட்டிருந்தன. குவாங் டெய்லியும் அவ்வாறு செய்திருந்தது.
சினார் மற்றும் மிங்குவான் ஆகிய இரண்டும் அவரின் வருகை பற்றி குறுகிய செய்தியை வெளியிட்டிருந்தன.
மேலும், மிங்குவான் தொடர்ந்து பெர்சே 4 டிஎபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் பேரணி சீனர்களின் ஆதிக்கத்திலிருந்ததோடு பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் டிஎபி ஆதரவாளர்கள் என்றும் கூறியுள்ளது.
அந்நாளிதழ் அதன் கருத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் பெர்சே 4 பேரணியில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் பினாங்கு மாநில முதல்வர் குவான் எங் ஆகியோர் பேரணியில் உரையாற்றிய படங்ளை அவற்றின் முன்பக்கங்களில் வெளியிட்டிருந்தன.
இந்த பெர்சே 4 பேரணியால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அந்த அம்னோவுக்கு சொந்தமான நாளிதழ் கூறிக்கொண்டது.
எந்த பத்திரிக்கையையும் நம்ப முடியாது. எல்லாமே தில்லுமுல்லு. நான் பத்திரிக்கை வாங்கி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது.