பெர்சே: டிபிகேஎல்லுக்கு சல்லிக்காசுகூட கொடுக்க மாட்டோம்

 

Bersih4notasentodbklகடந்த ஆகஸ்ட் 29-30 இல் டாத்தாரன் மெர்டேக்காவில் 34 மணி நேரத்திற்கு நடைபெற்ற பெர்சே 4 பேரணியில் பங்கேற்ற இலட்சக்கணக்கான மக்களால் ஏற்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் ரிம65,000 செலவிட்டதாககவும் அந்தச் செலவை பேரணி ஏற்பாட்டாளர் பெர்சே கட்ட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் நேற்று கூறியிருந்தார்.

குப்பைகளை அகற்றி எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பதற்காகத்தானே மக்கள் வரி கட்டி மந்திரிக்கும் ஊதியம் தருகிறார்கள். அதற்கும் மேலாக ஏன் குப்பைகளை அகற்ற பணம் தர வேண்டும் என்ற பரவலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

ஆனால், பேரணியை ஏற்பாடு செய்து எவ்விதப் பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டு வந்த பெர்சே டாத்தாரன் மெர்தேக்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வீசப்பட்டிருந்த குப்பைகளை அகற்றியதற்காக ரிம65,000 செலவிடப்பட்டதாக கூறிக்கொள்ளும் கிபிகேஎல்லுக்கு சல்லிக்காசுகூட கொடுக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.

பணம் கேட்டால், அந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வோம் என்று பெர்சே 4 இன் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்.

“ஆதாரத்தைக் காட்டுங்கள், நாங்கள் நீதிமன்றத்தில் பதில் கூறுவோம்”, என்று மரியா ஊடகங்களிடம் கூறினார்.