டிஎபி: லியோ அம்னோவின் இனவாத இசைக்கு நடனமாடுகிறார்

 

Dancing liowபெர்சே 4 சம்பந்தப்பட்ட அம்னோவின் இனவாத இசைக்கு மசீச தலைவர் லியோ தியோங் லாய் நடனமாடுகிறார்.

நடந்து முடிந்த பெர்சே 4 பேரணியில் பங்கேற்றவர்களில் இருவர் பிரதமர் நஜிப் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோரின் படங்களை மிதித்துத் துவைத்த சம்பவத்திற்கு லியோ டிஎபி மீது பழி போட்டார்.

அதனை மறுத்த டிஎபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக், படத்தை மிதித்துத் துவைப்பது முறையற்றது என்றாலும், அது நிச்சயமாக சீனர்கள் மலாய் தலைவர்களுக்கு எதிரானவர்கள் என்று பொருள்படாது என்றார்.

அச்சம்பவம் பெர்சே 4 ஏற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில ஆர்வம் மிகுந்த பங்கேற்பாளர்களால் விளைந்தது என்று லோக் விளக்கினார்.

[1950 மற்றும் 1960களில், பாக்கிஸ்தான், காராச்சியில் பாக்கிஸ்தானியர்கள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொடும்பாவியை எரித்தனர். சென்னையில் திறந்த காரில் பயணித்துக் கொண்டிருந்த  நேருவின் மீது திமுகவினர் செருப்புகளை வீசி எறிந்தனர். இவற்றை பற்றி நேருவிடம் செய்தியாளர்கள் வினவிய போது, அவர் சிரித்துக் கொண்டே, அது அவர்களின் உரிமை என்றார்.]

இந்தப் படம் மிதித்தல் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் உடனடியாகக் கருத்துரைக்க முன்வந்த லியோ, சில பெர்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் கொடும்பாவி மீது சிவப்பு சாயத்தைக் கொட்டியது பற்றி லியே ஒரு வார்த்தைகூட கூறவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

Dancing liow1இதன் மூலம், பெர்சே 4 ஐ ஓர் இனவாதப் பிரச்சனையாக்கி, பெர்சே பேரணி மீதான மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அம்னோவுக்கு லியோ துணைபோகிறார் என்று கூறிய லோக், “நஜிப்பின் கீழ் இயங்கும் பிஎன் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு டிஎபியின் தவறல்ல”, என்றார்.

அது நஜிப்பே தேடிக்கொண்டதாகும். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி யாரவது ரிம2.6 பில்லியன் நன்கொடையை அவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் போட்டார்கள் என்பதை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்றாரவர்.

ஆஸ்திரேலியா, பெர்த்தில் நடைபெற்ற பெர்சே 4 ஒருமைப்பாடு கூட்டத்தில் பங்கேற்ற மசீசவின் மூத்த தலைவர் டாக்டர் லிங் லியோங்க் சிக்கிடமிருந்து லியோ பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் லோக் கூறினார்.

உலகளவில் நடைபெற்ற 70 ஒருமைப்பாட்டு பேரணிகளில் கோலாலம்பூர் பெர்சே 4 பேரணியில் சீர்திருத்தங்கள் வேண்டும், நஜிப் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதையும் லோக் சுட்டிக் காட்டினார்.

டிஎபி இனவாத வெறுப்பை பரப்பி வருகிறது என்றும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு அக்கட்சி பொறுப்பேற்க வேண்டி வரும் என்று நேற்று மசீச தலைவர் லியோ நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.