செப்டம்பர் 16 பேரணிக்கு போலீஸ் தடை

red shirtசிவப்புச்  சட்டைகள்  செப்டம்பர்  16-இல்  நடத்தத்  திட்டமிட்டிருக்கும்  பேரணிக்கு  பாதுகாப்புக்  காரணங்களை  முன்னிட்டு  தடை  விதிக்கப்பட்டிருப்பதாக  போலீஸ்  படைத்  துணைத்  தலைவர்  நூர்  ரஷிட்  இப்ராகிம்  கூறியதாய்  பெர்னாமா  அறிவித்துள்ளது.

அப்பேரணி  ஏற்பாடு  செய்யப்பட்டதே  ஆகஸ்ட்  29-30  பெர்சே 4  பேரணிக்கு  எதிர்ப்புத்  தெரிவிப்பதற்காகத்தான்  என்றும்  கூறப்படுகிறது.

மற்றவற்றோடு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பதவி  விலகலுக்குக்  கோரிக்கை  விடுத்த  பெர்சே 4 பேரணி  சீனர்கள்  பெரும்பான்மையாகக்  கலந்துகொண்ட ஒரு  பேரணி  என்றும்  அது  மலாய்க்கார்களை  இழிவுபடுத்தும்  பேரணி  என்றும்  விமர்சகர்கள்  குறை  கூறியுள்ளனர்.

செப்டம்பர்  16  பேரணி, மலாய்  ஒற்றுமையைக்  காண்பிக்கவும்  மலாய்க்காரர்  கெளரவத்தைக்  காப்பதற்குமான  பேரணி  என  அதனை  ஏற்பாடு  செய்துள்ள  மலேசிய  என்ஜிஓ-கள்  கூட்டமைப்பின்  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  உத்துசான்  மலேசியாவிடம்  தெரிவித்தார்.  500  மலாய்  என்ஜிஓ-களின்  ஆதரவு  அதற்கு  இருக்கிறதாம்.

அதிகாரிகள்  தேசிய  நாளுக்கு  முந்திய நாள்  நடந்த  பெர்சே  4 பேரணிமீதே  நடவடிக்கை  எடுக்காதபோது   இப்பேரணியைத்  தடுப்பதற்கு  எந்தக்  காரணமுமில்லை  என்றாரவர்.

“இப்பேரணி மழையோ  புயலோ  நிலநடுக்கமோ  எது  வரினும் (செப்டம்பர் 16-இல்) நடப்பது  உறுதி”, என்றவர்  கூறியதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர்  16  பேரணி புக்கிட்  பிந்தாங்கிலும்  பெட்டாலிங்  ஸ்திரிட்டிலும்  நடக்கும். அவை  சீன வர்த்தகர்களைக்  கொண்ட பகுதிகளாகும். பெர்சே  4 மலாய்க்காரர்  வணிகர்கள்  நிரம்பிய   வட்டாரத்தில்  நடத்தப்பட்டதற்குப்  பதிலடி  கொடுக்கும்  வகையில் அவ்வாறு  செய்யப்படுகிறது.

பெர்சே  பேரணி  நடத்தியவர்கள் ஜாலான்  மஸ்ஜிட் இந்தியா,  ஜாலான்  துவாங்கு  அப்துல்  ரஹ்மான்  வட்டாரத்தில்  பேரணி  நடத்தியபோது  அங்குள்ள  வர்த்தகர்களின்  பிழைப்பை  எண்ணிப்  பார்க்கவில்லையே  என்றாரவர்.

“நாங்கள்  அமைதியாக  இருந்து  வந்தோம். அதற்கு  நாங்கள்  கோபம்  கொள்ளவில்லை  என்பது  பொருளல்ல. அதிகாரிகளுக்கும்  சட்டத்துக்கும்  அடிபணிந்து  தெரு ஆர்ப்பாட்டங்களில்  இறங்காதிருந்தோம். ஆனால், இப்போது  பணிந்து  போக  மாட்டோம். ஒன்று  கூடப்  போகிறோம்”, என்றவர்  கூறினார்.

இதனிடையே,   ஒரு  ஆடவர்  சீலாட் போஸ்  கொடுத்துக்  கொண்டும்  ‘tanah tumpah darahku’என்ற வாசகம்  எழுதப்பட்டுமுள்ள   பேரணி  சுவரொட்டிமீது   விசாரணை  தொடக்கப்பட்டிருப்பதாக  போலீஸ்  நேற்று  அறிவித்தது.