பிகேஆர்: புதிய எதிரணிக் கூட்டணிக்கு பாஸ் கட்சி வேண்டும்

pkrபுதிதாக  அமைக்கப்படும்  எதிரணிக்  கூட்டணியில்  பாஸ் கட்சியும்  இடம்பெற்றிருப்பதையே  பிகேஆர்  விரும்புகிறது.

“ஆம்.  தலைவர் (டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  தெளிவாக,  தெள்ளத்  தெளிவாகவே  இதைத் தெரிவித்துள்ளார்”, என  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  இன்று  ராவாங்கில்  கூறினார்.

பாஸ்  புதிய  கூட்டணியில்  இடம்பெறுவதை  ஒப்புக்கொள்ள  இயலாது  என்று  பினாங்கு  முதலைமைச்சர்  லிம்  குவான்  எங் கூறியிருப்பது  பற்றி  வினவப்பட்டதற்கு  அந்த  புக்கிட்  அந்தாராபங்சா  சட்டமன்ற  உறுப்பினர்  இவ்வாறு  கூறினார்.
பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்,   டிஏபி-வசமுள்ள  தொகுதிகளில்  பாஸ் தனது  வேட்பாளர்களைக் களம்  இறக்கும் என  அறிவித்ததை  அடுத்து  குவான்  எங்  புதிய  கூட்டணியில்  அதற்கு  இடமில்லை  என்று  கூறினார்.

லிம்  அவ்வாறு  கூறியது  அவரது  தனிப்பட்ட  கருத்து  என்றே  அஸ்மின்  கருதுகிறார்.

“நான் முன்னர்  தெரிவித்தது  என்னுடைய  தனிப்பட்ட கருத்து  அல்ல. அதுதான்  பிகேஆரின்  நிலைப்பாடு.  என்னுடைய  நிலைப்பாடோ,  அசிசாவின்  நிலைப்பாடோ  அல்ல.

“இதை  முழுமையாக  விவாதித்தோம்.  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கருத்தையும்  சேர்த்துக்  கொண்டிருக்கிறோம். பிகேஆர்  எல்லாரையும்  அரவணைத்துச்  செல்ல  வேண்டும்  என்பதே  அன்வாரின்  கருத்தாகும்”, என்றாரவர்.