சிவப்புச் சட்டைப் பேரணி ஏற்பாட்டாளர் யார்? மர்மம் நீடிக்கிறது

jamalபெர்சே 4 பேரணிக்கு  எதிர்ப்பாக  நடத்தப்படும் செப்டம்பர்  16  பேரணியில்  100,000 மேற்பட்ட  மலாய்க்காரர்கள்  கலந்துகொள்வார்கள்  என  அம்னோ  தலைவர்கள்  இருவர்  ஆருடம்  கூறியுள்ளனர்.

ஆனால்,  கூட்டரசுப்  பிரதேச  அம்னோ  இளைஞர்  தலைவர்  முகம்மட்  ரஸ்லான்  ராபீ,  சுங்கை  புசார்  அம்னோ  தொகுதித்  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  ஆகிய  அவ்விருவராலும்  ‘சிவப்புச்  சட்டை’ப்  பேரணி  என்று  அழைக்கப்படும்  அப்பேரணியின்  ஏற்பாட்டாளர்  யார்  என்பதற்குத்  தெளிவான  பதிலைக்  கொடுக்க  முடியவில்லை.

இதன்  தொடர்பில்  வாட்ஸெப்  செய்திகள்  நிறைய வலம்  வந்து  கொண்டிருக்கின்றன. அதில்  ஒன்று,  முன்னாள்  மலாக்கா  முதலமைச்சர்  தலைமையில்  இயங்கும்  பெர்சத்துவான்  சீலாட்  கெபாங்சான் (பெசாகா)தான்  அதை  ஏற்பாடு  செய்திருப்பதாகக்  கூறிற்று.

மலேசியாகினியிடம்  பேசிய  ஜமால்,  ஏற்பாட்டாளர்  இன்று  அல்லது  நாளை  போலீசாரைச்  சந்தித்து  பேரணி  பற்றி  விவாதிப்பார்  என்றார்.

“அன்று  100,000-இலிருந்து  300,000 மலாய்க்காரர்கள்வரை  கூடுவார்கள்  என்று  நினைக்கிறேன்.

“அமைதிப்  பேரணியான  அது  மலாய்க்காரர்கள்  அவர்கள்  அம்னோ,  பாஸ்  அல்லது  வேறு  எந்த  அமைப்பைச்  சேர்ந்தவர்களாக  இருந்தாலும்  பெர்சேயை  எதிர்ப்பதில்  ஒன்றுபட்டிருப்பதைக்  காண்பிக்கும்.

“அது  மலாய்க்காரர்கள் அது(பெர்சே)  போன்ற பேரணிகளை  ஆதரிக்கவில்லை  என்பதைக்  குறிப்பாக  வெளிக்காட்டும்.

“பெர்சே  மக்களைப்  பிரதிநிதிப்பதாகக்  கூறிக்கொள்கிறது. ஆனால், அதில்  சீனர்களும்  டிஏபி  கட்சியினருமே  நிறைய  இருந்ததைக்  கண்டோம்”, என்று  கூறிய  ஜமால்,  பெர்சே  எதிரணியின்  கருவியாக  செயல்படுவதாகச்  சாடினார்.